வாஷிங்டன்: இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் நேற்று கூறியதாவது: ஐரோப்பியர்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்ய வேண்டும். ஆனால், ஐரோப்பியர்களை ஏமாற்றம் அளிப்பவர்களாக நான் காண்கிறேன்.
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதை சுத்திகரித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விற்பனை செய்கிறது. இதற்காகத்தான் அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக 25% இறக்குமதி வரியை விதித்தது. ஆனால், உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய யூனியன், இந்த விஷயத்தில் அமெரிக்காவுடன் இணையவில்லை. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய விரும்பியதுதான் இதற்குக் காரணம் என்பது இப்போது தெரிகிறது.
ஒரு ஐரோப்பியர் உக்ரைன் மக்கள் குறித்துப் பேசும்போதெல்லாம், அவர்கள் உக்ரைன் மக்களைவிட வர்த்தகத்துக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றம் அளிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறும்போது, "அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, அமெரிக்க சந்தையை அணுகும் மற்ற நாடுகளுக்கான வரியை உயர்த்தினார்.
இதனால், அந்த நாடுகள் தங்களின் அதிகப்படியான உற்பத்திக்கு மற்ற வழிகளைத் தேடுகின்றன. ஐரோப்பிய யூனியன் அப்படித்தான் இந்தியாவை நாடியுள்ளது. இதில் இந்தியாவுக்கே அதிக நன்மை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.