தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த நவம்பரில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு ஊதிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டது. ஆணைகளை பெற்றவர்களுடன் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-2 (ஓய்வூதியம்) நீரஜ் சிங் மற்றும் அதிகாரிகள்.
சென்னை: ‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் நாளிலேயே ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வுபெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
அதன்படி, நவம்பர் மாதத்தில் பணி மூப்பு காரணமாக, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்கல் ஆணைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை மண்டலம் வழங்கி சிறப்பித்தது.
சென்னை ராயப்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஆணைகளை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா வழங்கினார்.
நிகழ்ச்சியில், மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் (ஓய்வூதியம்) நீரஜ் சிங், உதவி ஆணையர் பிபின்குமார், கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்) ஏ.பிரகாஷ், மேற்பார்வையாளர் கே.ஆனந்தி, முதன்மை அதிகாரி சு.செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.