வணிகம்

தங்கம் வாங்கிக் குவிக்கும் சீனாவின் பொருளாதார ‘அரசியல்’ பின்னணி என்ன?

போத்தி ராஜ்.க

உலகின் 2-வது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனா இப்போது அமெரிக்க டாலர் ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையிலும், மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையிலும் தமது தங்கம் கையிருப்புகளை மிகத் தீவிரமாக உயர்த்தி வருகிறது.

அமெரிக்கப் பங்குப்பத்திரங்களின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சர்வதேச வட்டி விகித்தின் மாற்றங்களால் தங்கம் விலை அவ்வப்போது தடுமாறினாலும், உலகின் பலத்த பொருளாதாரச் சரிவுகளைக் கூட தாங்கிப் பிடிக்கும் மாபெரும் சக்தி தங்கத்துக்கு உண்டு. இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாகச் சீனா ஆயிரக்கணக்கான டன் தங்கத்தை வாங்கி குவித்து வருவது சர்வதேச சந்தையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலக அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சீனா தமது கவனத்தை தங்கத்தை நோக்கி ஏன் திருப்பி இருக்கிறது? தங்கம் விலையைச் சரிவில் இருந்து தடுத்து நிறுத்துவதில் சீனாவின் இந்த மெகா திட்டம் செயல்படும் விதம் சற்று வியப்புக்கு உரியதுதான். இதன் பின்னணியில் உள்ள வியூகமும், சர்வதேச பொருளாதாரத்தில் இதன் தாக்கத்தையும் சற்று தெளிவாகப் பார்ப்போம்.

சீனாவின் தங்க வேட்டை:

சீனாவின் மத்திய வங்கியான ‘பீபிள்ஸ் பேங்க் ஆஃப் சைனா’ தங்கம் வாங்குவதை வியத்தகு முறையில் அதிகரித்து வருகிறது. சீனா தொடர்ந்து 23-வது மாதமாக தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. 2026 செப்டம்பர் மாதத்தில் மட்டும் 23 டன் தங்கத்தை சீனா இறக்குமதி செய்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு மாதத்தில் வாங்கப்பட்ட அதிகபட்ச தங்க கொள்முதல் இதுவாகும்.

சீனாவின் அதிகாரப்பூர்வ கணக்கின்படி, தற்போது 2,410 டன் தங்கத்தை அந்நாடு கையிருப்பில் வைத்துள்ளது. சீன தங்கக் கூட்டமைப்பின் தகவல்கள்படி, நடப்பாண்டின் முதல் பாதியில் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை 28.42 சதவீதம் அதிகரித்து உள்ளது.

சீனக் குடும்பங்களும், பெரிய மற்றும் சிறு நிறுவனங்களும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான சேமிப்பாகவும் முதலீடாகவும் கருதுகின்றன. 2026-ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், சாதனை அளவாக 158.8 பில்லியன் டாலர்களை செலவழித்து, 1,000 டன்களுக்கும் அதிகமாக தங்கத்தை சீனா இறக்குமதி செய்துள்ளது. இது, 2025-ம் ஆண்டு முழுவதும் இறக்குமதி செய்யப்பட்ட 886 டன் தங்கத்தை விட அதிகமாகும்.

காரண காரியம்:

1.அமெரிக்க டாலர் மீதான சார்பைக் குறைத்தல் (De-dollarization):

சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் பெரும்பகுதி அமெரிக்க டாலர்களாகவும், அமெரிக்கப் பங்குப் பத்திரங்களில் (US Treasuries) செய்த முதலீடாகவுமே இருக்கின்றன. ரஷ்யா மீது விதிக்கப்பட்டது போன்ற பொருளாதாரத் தடைகள் தங்கள் மீதும் விதிக்கப்பட்டால், அதிலிருந்து தப்பிக்கவே டாலருக்கு மாற்றாக தங்கம் மீது கவனம் குவிக்கப்படுகிறது.

2. ஆபத்து இல்லாத முதலீடு:

தங்கம் எந்த நாட்டையோ, அரசியல் அல்லது புவிசார் அரசியல் சூழலையோ சார்ந்தது இல்லை. விலை அடிமட்ட அளவுக்குச் சரியும், இழப்பு ஏற்படும் என்ற அச்சமும் இல்லாததால் சீனா துணிச்சலாகத் தங்கத்தை இருப்பு வைக்கிறது.

3. பொருளாதார ஸ்திரத்தன்மை, பணவீக்கப் பாதுகாப்பு:

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள ரியல் எஸ்டேட் துறை சரிவு, நெருக்கடி மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இருந்து நாட்டின் செல்வத்தைப் பாதுகாக்கத் தங்கம் ஒரு சிறந்த நீண்ட கால முதலீடாகப் பார்க்கப்படுகிறது.

4. புவிசார் அரசியல் பதற்றங்கள்:

தைவான் விவகாரம் மற்றும் மேற்கு நாடுகளுடனான பனிப்போர் சூழலில், நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பைப் பலப்படுத்தவும், எந்த அசாதாரண சூழலையும் சமாளிக்கவும், பிற நாடுகளின் பொருளாதார உதவியை முழுமையாக நம்பாமல் இருக்கவும் சீனா இந்த ராஜதந்திரத்தைத் கையாள்கிறது.

தங்கம் விலை குறைவின் காரணிகள்:

அமெரிக்க வட்டி விகித உயர்வு: அமெரிக்க மத்திய வங்கி  தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கியக் காரணி.  வட்டி விகிதத்தை உயர்த்தும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தில் செய்திருக்கும் முதலீட்டை எடுத்து, பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். தங்கத்தில் இருந்து உறுதியான வருமானம் ஏதுமில்லை என்பதால், முதலீடு என்பது பத்திரங்களை நோக்கித் திரும்பும்போது தங்கத்தின் விலை இறங்குமுகமாகச் செல்லும்.

டாலர் மதிப்பு வலுப்பெறுவது: சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு உயரும்போது, தங்கம் போன்ற பிற சொத்துகளின் விலை டாலர் மதிப்பில் குறையும்.

பொருளாதார, அரசியல் மாற்றம்: சர்வதேச அளவில் போர் பதற்றங்கள் தணிந்து, பொருளாதாரச் சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பும் அறிகுறிகள் உருவாகும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை விலக்கிக்கொண்டு, அதிக லாபம் தரும் முதலீட்டுக்கு மாறும்போது தங்கத்தின் விலை குறையும்.

தங்கத்தின் விலையை தாங்கும் சீன யுக்தி:

குறைந்தபட்ச வரம்பை உருவாக்குதல்: அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகமாகும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டுப் பத்திரங்களுக்கு மாறுவதால் தங்கம் விலை சரியும். ஆனால், விலை குறையும் போதெல்லாம் சீனாவின் மத்திய வங்கி (PBOC) மற்றும் அந்நாட்டு நிறுவனங்களும் சந்தையில் பெருமளவில் தங்கத்தை வாங்கிக் குவிக்கும்.

இதன் காரணமாக, தங்கம் விலை கீழே சரியும் போதெல்லாம் ஒரு ‘பலமான தளம்’ உருவாகிறது. இதன்மூலம் தங்கத்தின் விலை குறிப்பிட்ட எல்லைக்கு கீழே செல்லாமல் சீனா மறைமுகமாகத் தடுக்கிறது.

மிகப் பெரிய தேவை: டிஜிட்டல் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளைவிட, தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் மீதான (Physical Gold) உண்மையான தேவை சந்தையின் போக்கை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. சீனா மாதந்தோறும் டன் கணக்கில் தங்கத்தை வாங்கிச் சேமிப்பதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் புழக்கம் குறைகிறது. பொருளாதாரத் தத்துவத்தின்படி தேவை அதிகரிக்கும்போது விலை தானாகவே உயரும் அல்லது நிலைபெறும்.

சீனாவின் சிக்னல்: சீனா போன்ற ஒரு வல்லரசு நாடு தனது அந்நிய செலாவணி கையிருப்பில் டாலரின் பங்கைக் குறைத்து, தங்கத்தின் இருப்பை அதிகரிப்பது உலக அளவில் பல நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையாகும்.

உள்நாட்டுச் சூழல்: தற்போது சீனாவில் ரியல் எஸ்டேட் துறையிலும், பங்குச் சந்தையிலும் மந்தமான போக்கு நிலவுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் தங்களது சேமிப்பைப் பாதுகாக்கத் தங்கத்தைத் தேர்வு செய்கின்றனர். மத்திய வங்கியின் கொள்முதலும், மக்களின் அதீத ஆர்வமும் இணைந்து தங்கத்துக்கான தேவையை உச்சத்தில் வைத்திருக்க உதவுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT