பிஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று தள்ளுவண்டியில் இருந்து சிலிண்டர்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டெலிவரி ஊழியர். படம்: பிடிஐ
புதுடெல்லி: நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. அதிக நஷ்டத்தை ஈடுசெய்யும் விதமாக, 3 மாதங்களில் 2-வது முறையாக சிலிண்டர் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
மேற்காசியப் போர் காரணமாக உலக நாடுகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
சென்னையில் விலை ரூ.957.50: இந்நிலையில் நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.913-ல் இருந்து ரூ.942 ஆகவும் மும்பையில் ரூ. 912.50-ல் இருந்து ரூ.941.40 ஆகவும் கொல்கத்தாவில் ரூ.939-ல் இருந்து ரூ.968 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ரூ.928.50 இருந்து 957.50 ஆக உயர்ந்துள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஓரளவு ஈடுசெய்வதற்காக, கடந்த மார்ச் 7-ம் தேதி சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 3 மாதங்களில் இரண்டாவது முறையாக தற்போது ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரை விநியோகம் செய்வதற்கான செலவு சுமார் ரூ.1,600 முதல் ரூ.1,700 வரை உயர்ந்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த முழு நிதியாண்டில் வீட்டு உபயோக எல்பிஜி-க்காக சுமார் ரூ.60,000 கோடி வரை நஷ்டத்தை ஏற்றுக்கொண்டன. இது அதற்கு முந்தைய ஆண்டின் ரூ.41,338 கோடியை விட அதிகமாகும். இதற்கு இழப்பீடாக மத்திய அமைச்சரவை ரூ.30,000 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கசேதத்தைவிட இந்தியாவில் சமையல் காஸ் சிலிண்டர் மலிவாக விற்கப்படுவதாகவும், இதனால் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.700 நஷ்டத்தை சந்திப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதன் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைவிட இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் 14.2 கிலோ எடையுள்ள எபிஜி சிலிண்டரின் விலை கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி ரூ.60 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.853-ல் இருந்து ரூ.914 ஆக உயர்ந்தது. அதன்பின் இரண்டாவது முறையாக ரூ.29 அதிகரிக்கப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.942 ஆக உயர்ந்தது. இதுவரை ரூ.89 மட்டுமே சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1,046, வங்கதேசத்தில் ரூ.1,225, அமெரிக்காவில் ரூ.1,755, ஆஸ்திரேலியாவில் ரூ.1,765, கனடாவில் ரூ.2,411 ஆக உள்ளது.
இந்தியாவில் ஒரு சமையல் காஸ் சிலிண்டரை விநியோகிக்க ரூ.1,600-க்கு மேல் செலவு ஏற்படுகிறது. இதனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு சிலிண்டருக்கு சுமார் ரூ.700 இழப்பை சந்திக்கின்றன. இந்நிலையில் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைகளின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டருக்கு அரசு ரூ.300 மானியம் வழங்கி வருகிறது. இதனால் அவர்கள் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.642 செலுத்தி வருகின்றனர். இந்த மானிய சிலிண்டரை இந்த நிதியாண்டில் அரசு 4 ஆக குறைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இது குறித்து பெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்து இதுவரை தெளிவான விளக்கம் வரவில்லை என்று கூறப்படுகிறது.