டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், அங்கு ஆளும் பாஜக அரசு புதிய மின் வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் பெட்ரோல், சிஎன்ஜி வாயுவால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், வாகனங்கள் படிப்படியாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட இருக்கிறது.
உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் குறித்து சுவிட்சர்லாந்தின் ஐகியூ ஏர் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பட்டியல் வெளியிட்டது. அதில், காற்று தரம் மோசமாக இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்திலும், நகரங்களில் உத்தரப் பிரதேசத்தில் லோணி நகரம் முதலிடத்திலும் இருக்கிறது. டெல்லி 4-வது இடத்தில் இருக்கிறது.
பல ஆண்டுகளாகவே டெல்லியின் காற்றுத் தரம் மோசமடைந்து வருகிறது. டெல்லியை ஆண்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக அரசுகள் காற்றின் தரத்தை உயர்த்த பல முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் அது வெற்றி தரவில்லை.
அதிலும் குளிர் காலமான நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் டெல்லியில் காற்று மாசு உச்சக் கட்டத்துக்கு சென்றுவிடும். மனிதர்கள் சுவாசிக்க முடியாத நிலைக்கு சில நேரங்களில் காற்று மாசு வந்ததையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, முதியோர், நோயாளிகள், பாதுகாப்பாக வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
அதிகமான வாகனங்கள், ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய நிலங்களில் இருந்து எரிக்கப்படும் புகை, தொழிற்சாலையில் இருந்து வெளியேறிவும் புகை ஆகியவற்றால் டெல்லியின் காற்று தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
புதிய மின் வாகனக் கொள்கை
இதையடுத்து, டெல்லியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு, டெல்லியின் காற்றின் தரத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய மின் வாகனக் கொள்கையை ஜூன் மாதம் அறிவித்து, ஜூலை 1-ம் தேதி முதல் அதை நடைமுறைக்கு வருவதாக முதல்வர் ரேகா குப்தா அறிவித்தார்.
டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ‘மின் வாகனக் கொள்கை-2.0’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொள்கை 2026, ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து, 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இதன் நோக்கம், டெல்லியை மின்வாகனங்கள் உள்ள நகராக மாற்றி, காற்று மாசைக் குறைக்க வேண்டும். பெட்ரோல், சிஎன்ஜி வாயுவில் ஓடும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், பள்ளிப் பேருந்துகள், அரசு போக்குவரத்து பேருந்துகளை மின் வாகனமாக மாற்றுவதாகும்.
2030-ம் ஆண்டுக்குள், டெல்லியில் ஓடும் வாகனங்களில் 30% வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றுவதை இலக்காக வைக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் 14% வரை மின் வாகனங்கள் கொண்ட நகராக டெல்லி மாற்றப்பட்டுவிட்டது. இதை, 5 ஆண்டுகளுக்குள் 30 சதவீதமாக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
மின் வாகனக் கொள்கைக்காக ரூ.15,000 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.8,000 கோடி மின் வாகன உள்கட்டமைப்பு, வரிச் சலுகைக்காகவும், பெட்ரோலில் செயல்படும் வாகனங்களை ஸ்கிராப்பில் ஒப்படைப்போருக்கு சலுகை அளிக்கவும் ஒதுக்கப்பட உள்ளது.
மீதமுள்ள ரூ.7,000 கோடி மக்களிடம் மின் வாகனக் கொள்கையை ஊக்கப்படுத்த, உரிய ஊக்கத் தொகை வழங்கவும், சார்ஜிங் பாயின்ட் அமைக்கவும் (ரூ.1,000கோடி) ஒதுக்கப்பட உள்ளது. டெல்லி நகரில் மட்டும் 32 ஆயிரம் சார்ஜ்ஜிங் மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான இடங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்:
> 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் பேட்டரில் ஓடும் ஆட்டோக்கள், 3,500 கிலோ எடைக்குள் இருக்கும் சரக்கு வாகனங்களான என்1 பிரிவு வாகனங்கள் மட்டுமே டெல்லி போக்குவரத்தில் பதிவு செய்யப்படும்.
> 2028-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் டெல்லியில் பேட்டரில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
> இந்த புதிய மின்வாகனக் கொள்கை நடைமுறைக்கு வந்து 2 ஆண்டுகளுக்குள் டெல்லியில் உள்ள பள்ளிகளில் பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளில் குறைந்தபட்சம் 10% பேருந்துகளை பேட்டரி வாகனமாக மாற்றி இருக்க வேண்டும்.
டெல்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு காரணம், 33% சரக்கு போக்குவரத்து வாகனங்களும், 46 சதவீதம் இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்கள்தான். இந்த காற்று மாசைக் குறைக்கும்வகையில்தான் இந்த வாகனங்கள் மாற்றப்படுகின்றன.
என்னென்ன சலுகைகள் அறிவிப்பு?
புதிய மின் வாகனக் கொள்கையில் ரூ.30 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் வாகனங்கள் வாங்குவோருக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை டெல்லி அரசு ரத்து செய்துள்ளது.
அதிகாரிகள் அளித்த தகவலின்படி, “மின் வாகன இரு சக்கர வாகனங்களை வாங்குவோருக்கு அரசு சார்பில் ரூ.30,000 மானியமாக வழங்கப்பட உள்ளது. 2-வது ஆண்டில் ரூ.20,000, 3-வது ஆண்டில் ரூ.10,000 தரப்படும்.
3 சக்கர வாகனங்களை வாங்குவோருக்கு முதல் ஆண்டில் ரூ.50,000, 2-வது ஆண்டில் ரூ.40,000, 3-வது ஆண்டில் ரூ.30,000 மானியமாகத் தரப்படுகிறது.
என்-1 வர்த்தக வாகனங்களை வாங்குவோருக்கு முதல் ஆண்டில் ரூ.1 லட்சம் மானியம் தரப்படும். பிஎஸ்-4 இரு சக்கர வாகனங்களை பயன்பாட்டை நிறுத்தி அதை ஸ்கிராப்பில் போடுபவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத் தொகையும், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.25,000, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். என்-1 வாகனங்களை ஸ்கிராப்பில் போடுவோருக்கு, ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
பேட்டரில் இயக்கப்படும் என்-2 சரக்கு வாகனங்கள் (3.5 முதல் 12 டன் வரை) அடுத்த 10 ஆண்டுகளுக்கு, டெல்லிக்குள் நுழைய நேரக்கட்டுப்பாடு இல்லை. இந்த சலுகை புதிய கொள்கை அமலுக்கு வந்தபின் 3 மாதங்களுக்குள், என்-2 டிரக் வாங்கும் முதல் 1,000 பேருக்கு மட்டுமே பொருந்தும்.
மின் வாகனக் கொள்கையால் என்ன பயன்?
1. டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பெட்ரோல், சிஎன்ஜி வாகனங்கள் பயன்பாட்டைக் குறைத்து காற்று மாசைக் குறைக்க முடியும்.
2. காற்று மாசைக் குறைக்க உதவி செய்யும் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், என்-1, என்-2 வாகனங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க முடியும்.
3. மின் வாகனங்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்த முடியும். மாநிலத்தில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்க உதவலாம். பேட்டரி சர்வீஸ், பேட்டரி வாகனங்களை அதிகப்படுத்த முடியும்.
4. தொடக்கத்தில் மின் வாகனப் பயன்பாட்டை ஊக்கத் தொகை, மானியம் மூலம் மக்களிடம் ஊக்கப்படுத்தி, மாற்றம் ஏற்படச் செய்து, நீண்ட காலத்தில் முழுமையாக மாற வைக்க முடியும்.
சவால்கள் என்னென்ன?
> பேட்டரில் இயங்கும் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள் விலை அதிகம் என்பதால், அதை வாங்குவது கடினமாக இருக்கும். குறிப்பாக டெலிவரி வேலையில் இருப்போர் அதிக விலை கொடுத்து இரு சக்கர வாகனங்களை வாங்க நேரிடும்.
> மின் வாகனங்கள் வாங்குவோருக்கு வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் எளிதாக கடன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> சார்ஜிங் பாயின்ட்களை அதிகப்படுத்துவது என்பது சவாலானதாகும். டெல்லி அரசு மட்டுமே சார்ஜிங் பாயின்ட்களை வைக்காமல், தனியார் முதலீட்டையும் ஊக்கப்படுத்த சலுகை அளிக்க வேண்டும். அதை முறையாக பராமரிப்பதையும் கண்காணிக்க வேண்டும்.
> டெல்லியில் அதிக அளவு மின் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, மின் தேவை அதிகரிக்கும். அப்போது மத்திய மின் தொகுப்பிலிருந்து டெல்லிக்கு அதிக மின் தேவை ஏற்படும், அதை வழங்க மத்திய அரசு உதவ வேண்டும்.
> மக்களிடம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி திட்டத்தை அதிகப்படுத்தி, அதன் மூலம் சார்ஜிங் பாயின்ட்களை உருவாக்கி, மின்சாரத்தை சேமிக்கலாம்.
> பயன்படுத்தப்பட்ட பேட்டரி, வாகனங்களை மறுசுழற்சி செய்வது, தொழிற்சாலை அமைக்க போதுமான நிலம், வாகன ரிப்பேர் செய்யும் தொழிலாளர்களுக்கு கட்டமைப்பு, பயிற்சி அளித்தல் சவாலாகும்.