புதுடெல்லி: ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், 7 சொகுசு கார்களை வாங்குவதற்கான சர்ச்சைக்குரிய டெண்டரை ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அக்டோபர் 16, 2025 அன்று, சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 7 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330Li ‘எம் ஸ்போர்ட்' கார்களை வழங்குவதற்கான சர்ச்சைக்குரிய டெண்டர் வெளியிடப்பட்டிருந்தது.
உயர்தர வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான லோக்பாலின் இந்த முடிவை எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சொகுசு கார் வாங்கும் லோக்பால் அமைப்பின் முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார். இது சாமானிய மக்களின் அமைப்பா அல்லது ஆடம்பர பிரியர்களின் அமைப்பா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதேபோன்று, முன்னாள் நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்தும், லோக்பால் இந்த டெண்டரை ரத்து செய்துவிட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.