திருச்சி: திருச்சி, திருப்பதி உட்பட நாட்டில் உள்ள 11 விமான நிலையங்களை 5 தொகுப்புகளாக பிரித்து தனியார் வசம் ஒப்படைப்பது குறித்த முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று (அக்.30) நடைபெறுகிறது.
நாட்டில் அதிக வருவாய் மற்றும் போக்குவரத்து உள்ள ஒரு பெரிய விமான நிலையத்துடன், குறைந்த வருவாய் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தை இணைத்து தனியார்வசம் (பொது-தனியார் கூட்டு முறையில்) ஒப்படைத்து உலகத் தரத்திலான வசதியை பெறுவதற்காக ‘பண்ட்லிங் மாடல்’ திட்டத்தை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இதுவரை 14 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
அடுத்த கட்டமாக நாட்டில் உள்ள 11 விமான நிலையங்களை 5 தொகுப்புகளாக பிரித்து, அதாவது அமிர்தசரஸ் - காங்க்ரா, வாராணசி - கயா - குஷிநகர், புவனேஸ்வர் - ஹூப்ளி, ராய்பூர் - அவுரங்காபாத், திருச்சி - திருப்பதி ஆகிய விமானநிலையங்களை தனியாருக்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிலையங்களை நவீனமயமாக்கவும், உள்கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ் விமான நிலையத்தின் இயக்கம், மேலாண்மை, மேம்பாடு ஆகியவற்றை ஒப்பந்ததாரர் பராமரிக்க வேண்டும். இதில், பயணிகள் முனையம், நகர்ப்புறக் கட்டிடங்களை உள்ளடக்கிய கட்டமைப்பு, எல்லைச்சுவர், வாகனங்கள், அலுவலகப் பொருட்கள், கணினி மென்பொருள் ஆகியவை அடங்கும்.
அதேவேளையில், வான் போக்குவரத்து கோபுரம், தகவல் தொடர்பு, வழிநடத்தல், கண்காணிப்பு சேவைகளை இந்திய விமான நிலைய ஆணையம் தொடர்ந்து வழங்கும். மேலும், இந்திய விமான நிலைய ஆணைய சரக்கு தளவாடங்கள் மற்றும் இணை சேவைகள் நிறுவனம் சலுகையாளருடன் சேர்ந்து இயங்கும்.
திருச்சி - திருப்பதி உட்பட 11 விமான நிலையங்களை 5 தொகுப்புகளாக பிரித்து தனியாருக்கு வழங்குவது குறித்து சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று (அக்.30) நடைபெறுகிறது.