பெங்களூரு: பெங்களூருவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் காரணமாக எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூருவில் வணிக நிறுவனங்களுக்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் வழங்குவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பண்டங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான தங்கும் விடுதிகளில் உணவு தயாரிக்கும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றில் தங்கியுள்ள லட்சக்கணக்கானவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். உணவகங்கள், தங்கும் விடுதிகள் விறகு, மின்சார அடுப்பு மூலம் உணவு சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் அதே சூழலில், கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டுக்கு உதவும் சிலிண்டர் ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா நேற்று பெங்களூருவில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், கெயில் எரிவாயு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருள் நிறுவனங்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கே.எச்.முனியப்பா கூறுகையில், “கர்நாடகாவுக்கு நாளொன்றுக்கு 50 ஆயிரம் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. 3.5 லட்சம் வீட்டு உபயோக சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. தற்போது இருப்பை கவனத்தில் கொண்டு, எரிவாயு மற்றும் எரி பொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
மருத்துவமனை, கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அத்தியா வசிய தேவைகளுக்கு சிலிண்டர்கள் விநியோகிக்கப் படுகின்றன. வீட்டு உபயோக சிலிண்டர் போதுமான இருப்பு உள்ளதால், பொது மக்கள் அதிகளவில் முன்பதிவு செய்ய வேண்டாம்" என்றார்.