புதுடெல்லி: வணிகப் பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் விலை நேற்று முதல் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன.
மேற்கு ஆசிய போர் காரணமாக, கடந்த பிப்ரவரி 28 முதல் உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் உயர்ந்தது. குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட பதற்றம், இந்தியாவுக்கான எரிசக்தி விநியோகத்தைப் பாதித்தது. இதனால் உள்நாட்டில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது அங்கு சுமுக நிலை ஏற்பட்டுள்ளதால், விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.183.50 குறைக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த விலை குறைப்புக்குப் பின், சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆகவும், டெல்லியில் ரூ. 2,930 ஆகவும் மாறியுள்ளது. கடந்த மாதத்தில் இதன் விலை வரலாற்றிலேயே மிக உச்சமாக ரூ. 3,113-ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி தனது நாடு தழுவிய நெட்வொர்க்கில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இந்த புதிய விலை மாற்றம் நயாரா நிறுவனத்தின் 7,000-க்கும் மேற்பட்ட பங்க்குகளில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் மற்றொரு பலனாக, விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ. 110 ஆகக் குறைந்துள்ளது.