கோவை: அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வு, டீசல் கட்டுப்பாடு, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு, சுங்கக் கட்டண நெருக்கடி என பல்வேறு பிரச்சினைகளும் தொழில் துறையை சூழ்வதால் கோவை தொழில் துறை நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.
வளைகுடா போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு, விலையேற்றம் தற்போதும் தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக தொழில் துறை மற்றும் உணவகங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 9 முதல் ரூ. 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, இன்று (ஜூன் 15) முதல் சரக்கு வாகன கட்டணங்கள், சுமார் 15 சதவீதம் வரை உயர்த்தப்படுவது தொழில் துறையினருக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது.
இது குறித்து கோவையை சேர்ந்த தொழில் துறையினர் கூறியது: “மூலப்பொருள் விலை ஏற்றம், மின்சார பிரச்சினை, மின் கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பள நெருக்கடி, சர்வதேச சந்தையில் உற்பத்திப் பொருட்களை விற்க முடியாத நிலை என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது தொழிற்சாலைகளுக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என, மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது கவலையளிக்கிறது. இந்த நடவடிக்கை தொழில் துறையை முழுமையாக முடக்கும்.
டீசலை சார்ந்து இயங்கும் பெரிய தொழிற்சாலைகள் மூலம் குறு, சிறு தொழில்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றன. இந்த கட்டுப்பாடுகளால் ஒட்டுமொத்த உற்பத்தி சங்கிலியும் தடைபடும். இத்தகைய சுமைகளால் தொழில்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. வட்டி விகிதங்களையாவது ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. தொழிலமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசி, இந்த நெருக்கடிகளுக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.
வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. வெளிச்சந்தையில் ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுத்து சிலிண்டர் வாங்கி தொழில் செய்யும் அளவுக்கு லாபம் இல்லை. இதனால், பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினர்.
கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் சம்மேளனத் தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, “பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தொழில்களும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளது. லாரி உரிமையாளர்கள் சங்கம், வாடகை கட்டணத்தை இன்று முதல் உயர்த்துகிறது. மூலப்பொருள் உற்பத்தி செலவு அதிகரிப்பதால், அவற்றின் விலையும் உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தொழில் துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்றார்.