கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 வயது குழந்தை உயிரிழப்பு - வடமாநில இளைஞர் கைது

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 வயது குழந்தை உயிரிழப்பு - வடமாநில இளைஞர் கைது
Updated on
1 min read

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை கைது செய்யக் கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கில் பணிபுரிந்து வரும் பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் குடும்பத்துடன் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை, வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், பொதுமக்கள் உதவியுடன் அந்தப் பகுதியில் குழந்தையை தேடினர்.

அப்போது, 3 வயது பெண் குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காயங்களுடன் கிடந்த குழந்தையை, பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற குழந்தை, மேல் சிகிச்சைக்காக சென்னை - ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்தது தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்ற இளைஞர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், 'குழந்தையை புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆகவே, இச்சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி இன்று கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையம் எதிரில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸார், ’உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தனர். பின்னர், சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 வயது குழந்தை உயிரிழப்பு - வடமாநில இளைஞர் கைது
“எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை?” - கும்மிடிபூண்டி பாலியல் வன்கொடுமைக்கு இபிஎஸ் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in