வணிகம்

யுபிவிசி சந்தையை ஆக்கிரமிக்கும் சீன தயாரிப்புகள்: அதிகரிக்கும் இறக்குமதியால் ஜன்னல் உற்பத்தி தொழில் பாதிப்பு

அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: சீ​னா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் அதி​களவி​லான யுபி​விசி தயாரிப்​பு​களால், உள்​நாட்டு உற்​பத்தி தொழில் பாதிக்​கப்​பட்டு வரு​வ​து தொடர்பாக அனைத்திந்​திய யுபி​விசி புரொஃபைல் உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத்​தின் நிறு​வனர் ஆரோக்​கிய​சாமி, தலை​வர் இனியன் சிவம், துணைத் தலை​வர்​கள் வினோத் குமார், சஞ்​சய், அறங்​காவலர் செந்​தில் முரு​கன் ஆகியோர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள் மற்​றும் வீடு​களில் பரவலாக பயன்​படுத்​தப்​படும் ஜன்​னல்​களுக்​கான யுபி​விசி உதிரிப்​பாகங்​களை (புரொஃபைல்​கள்) இந்​திய நிறு​வனங்​கள் உள்​நாட்​டிலேயே தயாரித்து வரு​கின்​றன.

ஆனால் சமீப​கால​மாக வெளி​நாடு​களி​லிருந்​து, குறிப்​பாக சீனா​விலிருந்து அதி​கள​வில் இறக்​குமதி செய்​யப்​படும் தரம் மற்​றும் விலை குறைந்த யுபி​விசி பாகங்​கள் இந்​திய சந்​தையை ஆக்​கிரமித்து வரு​கின்​றன.

          

மூலப்​பொருட்​களின் விலை வித்​தி​யாசம் காரண​மாக சீனா தயாரிப்​பு​கள் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்​கப்​படும் நிலை​யில், இந்​திய தயாரிப்​பு​கள் ரூ.130-ல் இருந்து ரூ.180 வரை விற்​கப்​படு​கின்​றன.

இந்​திய இறக்​குமதி தரவு​களின்​படி கடந்த 2024-ம் ஆண்​டில் சீனா​விலிருந்து மட்​டும் யுபி​விசி தயாரிப்​பு​கள் ஒரு லட்​சம் டன் இறக்​குமதி செய்​யப்பட்​டுள்​ளன. அதன் தொடர்ச்​சி​யாக 2025-ல் 1.54 லட்​சம் டன்​னாக​வும், 2026-ல் முதல் 45 நாட்​களில் 25 ஆயிரம் டன்​ இறக்​குமதி ஆகி​யுள்​ளன. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதி​க​மாகும்.

நடப்​பாண்டு இந்த இறக்​குமதி 2 முதல் 2.5 லட்​சம் டன் தொடும் என எதிர்​பார்க்​கலாம். யுபி​விசி தயாரிப்​பு​களுக்​கான சந்​தை​யில் 51 சதவீதப் பங்கை இறக்​குமதி தயாரிப்​பு​கள் மட்​டுமே பிடித்​துள்ள நிலை​யில், உள்​நாட்டு உற்​பத்​தி​யாளர்​களின் பங்கு 45 சதவீத​மாக தற்​போது குறைந்​துள்​ளது.

எனவே இந்த ​விவ​காரத்​தில் மத்​திய அரசு தலை​யிட்டு இறக்​குமதி செய்​யப்​படும் அனைத்து யுபி​விசி பொருட்​களுக்​கும் தரக்​கட்​டுப்​பாடு நிறு​வனத்​தின் தரச் சான்​றிதழை துறை​முகங்​களி​லேயே வழங்​கு​வதைக் கட்​டாய​மாக்க வேண்​டும். மூலப்​ பொருட்​களுக்​கான வரி விகிதங்​களை சீரமைக்க வேண்​டும் எனத் தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT