சென்னை: நாட்டில் அதிகமாக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
ரயில்வேயில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களுடன், நவீன கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதனால், ரயில்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மாநகரங்களில் பயணிகளின் எண்ணிகை ஆண்டுதோறும் 7 முதல் 9 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த நிதி ஆண்டியில், ரயில்வேயின் தகவலின்படி, நாட்டிலேயே பயணிகள் பிரிவில், அதிகமாக வருவாய் ஈட்டும் முதல் 10 இடங்களில் சென்னை சென்ட்ரல் 3-வது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: வருவாய் ஈட்டுவதில் முதலிடத்தில் டெல்லி ரயில் நிலையம் ரூ.3,337 கோடியும், 2-ம் இடத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையம் ரூ.1,692 கோடியும், 3-வது இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ.1,299 கோடியும், 4- வது இடத்தில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் ரூ.1,276 கோடியும், 5-வது இடத்தில், டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் ரூ.1,227 கோடி வருவாயும் ஈட்டியுள்ளன.
இதையடுத்து, மும்பை, அகமதாபாத், பூனே ரயில் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. மேற்கண்ட முக்கிய நகரங்கள் நான்கு வழி பாதைகளாக மாற்றப்பட உள்ளன.
இதனால், பயணிகள், சரக்கு ரயில்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். ரயில் பாதை பணிகள் முடியும்போது, 2030ல் தற்போதுள்ளதை காட்டிலும், 50 சதவீதம் ரயில்கள் அதிகரிக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.