புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.1,975 கோடியில் இரு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிறப்பு பொருளாதார மண்டல வாரியம், புதுச்சேரியில் இரண்டு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களில், உழவர்கரை நகராட்சி மூலம் தட்டாஞ்சாவடியில் அமைக்கப்படும் ஐடி, ஐடிஇஎஸ் சிறப்பு பொருளாதார மண்டலம், இந்தியாவில் ஒரு நகராட்சி அமைப்பால் உருவாக்கப்படும் முதல் திட்டமாகும்.
மற்றொன்று, வில்லியனூர் வட்டத்தில் உள்ள கரசூரில், புதுச்சேரி தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகத்தால் அமைக்கப்படும் பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியின் தொழில் வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்க புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இரண்டும் முக்கிய வழிவகை செய்யும். மேலும், தமிழ்நாடு, அந்தமான் மற்றும் புதுச்சேரி பிராந்தியத்தின் தொழில் சூழல் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
பல்வகைப்பட்ட துறைகள் மற்றும் பெரிய அளவிலான திட்டங்கள் பிராந்திய பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பதையும் இவை உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவின் தொழில், தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை வலுப்படுத்துவதை இது பிரதிபலிக்கிறது.
இத்தகைய வளர்ச்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவின் தொழில் கட்டமைப்பை மேலும் வலிமையாக்கவும் பெரிதும் உதவும்.
இதில் தட்டாஞ்சாவடியில் அமையும் சிறப்பு பொருளாதார மண்டம் 8.6 ஹெக்டேரில் ரூ.725 கோடி முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 3,500 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐிடி, ஐடிஇஎஸ் துறைகளில் பணி கிடைக்கும். கரசூரில் அமையும் சிறப்பு பொருளாதார மண்டலம் 86.2 ஹெக்டேரில் அமையும்.
இங்கு ரூ.1,250 கோடியில் முதலீடு செய்யப்படும். 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் இங்கு செயல்படும். இரு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ரூ.1,975 கோடி முதலீடு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.