மகாதானபுரம் ராஜாராம்
கரூர்: இந்திய-அமெரிக்கா ஒப்பந்தம், நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் என்று காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் கடந்த 18 ஆண்டுகளாக இழுபறியில் இருந்தது. இதனால், இந்திய விவசாயப் பொருட்கள், பால் பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்பட்டது.
புதிய ஒப்பந்தப்படி, அமெரிக்கா பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆப்பிள், பால், சோளம் ஆகியவற்றை இந்தியாவுக்கு அனுப்பினாலும், நமது விவசாயம் அழியாது. தற்போது இந்திய விவசாயம் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்துக்கு ஒரு பயிர் உற்பத்தியாளர் குழு செயல்படுகிறது. வேளாண் பொருட்களில் இருந்து எத்தனால், ஸ்டார்ச், செல்லுலோஸ், வேதிப் பொருட்கள் தயாரிக்கும் விவசாயிகள், தொழில்முனைவோராக மாறியுள்ளனர். கிராமப்புற தொழில்கள் வளரத் தொடங்கிவிட்டன.
இந்திய மருந்து, உயிரியல் பொருட்கள், தொலைத்தொடர்புக் கருவிகள், விலை மதிப்பற்ற கற்கள், பெட்ரோல் பொருட்கள், வாகனங்கள், உதிரி பாகங்கள், தங்கம், பிற மதிப்புள்ள உலோக நகைகள், பருத்தி ஆயத்த ஆடைகள், இரும்பு, எஃகு பொருட்கள், இந்தியப் பொருட்களுக்கு தாராளமான சந்தையாக அமெரிக்கா இருக்கும்.
இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தால், இந்தியப் பொருளாதாரம் சர்வதேச அளவில் முதல் நிலையை அடையும். இந்திய விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.