கும்பகோணத்தில் காலண்டர் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்.

 
வணிகம்

மூலப்பொருட்களின் விலை 15% அதிகமானதால் 2027-ம் ஆண்டு காலண்டர் விலை உயர்வு

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: 2027 ஆங்கிலப்புத்தாண்டை யொட்டி, கும்பகோணம் கோட்டத்தில் தினசரி, மாத காலண்டர் தயாரிக்கும் பணியில் 6-க்கும் மேற்பட்ட மொத்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் காலண்டர் என்றால் சிவகாசி என்றிருந்த நிலையில், தற்போது கும்பகோணத்திலேயே காலண்டர் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில் தெற்கு வீதியில் இயங்கி வரும் நிறுவனத்தில் 2027-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி, பல மாவட்டங்களில் உள்ள கல்வி, வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான காலண்டரை தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிகழாண்டு காலண்டர் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால், காலண்டரின் விலையும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து காலண்டர் தயாரிப்பாளர் ரகுராமன் கூறியது: காலண்டர்களுக்காக சிவகாசியில் இருந்து நாள்காட்டி கேக்குகள், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்து அட்டைகளை வரவழைத்து, அதில் ஆர்டர் கொடுத்தவர்களின் நிறுவனம், கட்சி, பள்ளிகள் பெயரை அச்சிட்டு, அட்டையில் ஒட்டி உலர்த்தி, தினசரி கேக்குகளுடன் விற்பனை செய்யப்படும்.

இதேபோல, மாத காலண்டரும் தயாரித்து வழங்கப்படுகிறது. கடந்தாண்டில் 1 டன் அட்டை ரூ.40 ஆயிரத்துக்கு கிடைத்தது.

நிகழாண்டு 1 டன் அட்டை ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்து விட்டது. மேலும், தினசரி காலண்டருக்குத் தேவையான கேக், பசை, பேப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் 15 சதவீதம் உயர்ந்துவிட்டது.

எனவே, கடந்தாண்டு, தினசரி காலண்டர் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ.70 வரை விற்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT