புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி 2024-ல் ரூ.5.74 லட்சம் கோடியாக உயர்ந்ததாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரிக்ஸ் வர்த்தக மன்றம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: இதுவரை நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றங்களிலேயே இதுதான் மிகப்பெரியது.
உலகளாவிய மதிப்பு சங்கிலிகளைப் பாதிக்கும் விஷயங்கள், விவசாயம் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள், சேவை வர்த்தகம், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறை சார்ந்த பிரச்சினைகளை இந்த மன்றம் விவாதித்தது.
உலகளாவிய ஏற்றுமதியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, சுமார் 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி, 2003-ல் சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலராக(ரூ.8,618 கோடி) இருந்த நிலையில், 2024-ல் 6 டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.5.74 லட்சம் கோடி) உயர்ந்தது. இது அதன் சந்தையின் அளவையும் ஆற்றலையும் பிரதிபலிக்கிறது.