பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமார் | கோப்புப் படம்
சென்னை: பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமார் பல நூறு கோடி ருபாய் முறைகேடு செய்ததாக வெளியான செய்திகளில் துளி அளவும் உண்மை இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்.முருகன், நிர்வாக இயக்குநர் கே.மனோகரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவ்சிங் கோ ஆப்ரேடிவ் சொசைட்டி லிமிடெட் (பிஎல்எம் - BLM) 2006 ஆண்டு நிறுவனர் ஆர்.பிரேம்குமாரால், மற்ற உறுப்பினர்களுடன் சேர்த்து கூட்டுறவு நிறுவனமாக தொடங்கப்பட்டது.
சிறிய முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று ஆண்டுக்கு சுமார் ரூ.162 கோடி வரவு செலவு செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் 155 கிளை கூட்டுறவு நிறுவனங்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. 20 ஆண்டுகளாக செயல்படும் எங்கள் நிறுவனத்தில் 4,64,706 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
2006 முதல் 2016 வரை ஆர்.பிரேம்குமார் பிஎல்எம் நிறுவனத்தின் தலைவராக இருந்து வழிநடத்தினார். தற்போது, கருணாமூர்த்தி தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் முதல் பிஎல்எம் நிறுவனர் ஆர்.பிரேம்குமார் பல நூறு கோடி ருபாய் முறைகேடு செய்ததாக சில ஊடகங்கள் அவதூறு செய்திகளை வெளியிட்டன. அவற்றில் துளி அளவும் உண்மை இல்லை.
எங்கள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான நவீன் என்பவர், எங்கள் நிறுவனர் ஆர்.பிரேம்குமாருக்கு எதிராக கடந்த மே 8-ம் தேதி, கோழிக்கோடு குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில், பிரேம்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த புகாரின் மீது எந்த விசாரணையும் நடத்தாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பிரேம்குமார், கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில், தான் தவறான புரிதலுடன் புகார் மனுவை தாக்கல் செய்ததாகவும், அந்த புகாரை வாபஸ் பெற்று கொள்வதாகவும் நவீன் கேரளா உயர் நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த அக்.29 அன்று கேரளா போலீஸ், பிரேம்குமாரை சட்ட விரோதமாகக் கைது செய்தது. இதையடுத்து, பிரேம்குமாரை கைது செய்தது சட்ட விரோதம் என்றும், கைது சட்ட நடவடிக்கைகளின்படி இல்லை என்றும் கூறி பிரேம்குமாரை, எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்து அக்.30 அன்று கோழிக்கோடு குற்றவியல் நீதிபதி உத்திரவிட்டார். இந்நிலையில், கேரளா போலீஸ் மேலும் சில பொய் வழக்குகளை பதிவு செய்ய உள்ளதாகத் தெரிகின்றது.
எங்களுடைய நிறுவனம் 20 ஆண்டுகளாக உறுப்பினர்களின் நம்பிக்கையுடன் எவ்வித புகாரும் இன்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. தற்போது பிஎல்எம் கூட்டுறவு நிறுவனத்திற்கும், அதன் நிறுவனர் பிரேம்குமாரின் நற்பெயருக்கும் கேடு விளைவிக்கும் முயற்சியில் கேரள போலீஸ் தீவிரமாக உள்ளது. அனைத்து பொய் புகார்களையும் சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தின் மூலம் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
பிஎல்எம் நிறுவனம் கடந்த 20 வருடங்களாக அனைத்து உறுப்பினர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் அவர்களின் வைப்புத் தொகைகள் முதிர்வடையும் தேதியில் உடனடியாக தகுந்த லாபத்துடன் வழங்கி வருகின்றது என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பிஎல்எம் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கைகள், கணக்கு வழக்குகள் முறையாக தணிக்கை செய்யப்பட்டு, நிறுவனத்தின் பொதுக் குழு கூட்டத்தில் ஆண்டுதோரும் ஒப்புதல் பெற்று மத்திய Registrar, Central Multi state Co.operative Society அவர்களிடம் முறையாக தாக்கல் செய்து வருகின்றோம் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.