புதுடெல்லி: உணவு பாதுகாப்பு குறித்த ஆய்வக சோதனையில் ‘பிஸ்லரி’ குடிநீரின் மாதிரி தோல்வி கண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் பணியை கடந்த 1965 வாக்கில் பிஸ்லரி நிறுவனம் முன்னெடுத்தது.1969 வாக்கில் இத்தாலிய நாட்டு உரிமையாளர் வசமிருந்து பார்லே குழுமத்தின் ஜெயந்திலால் சவுகான் அதனை வாங்கி இருந்தார்.
1993 வாக்கில் தண்ணீர் நீங்கலாக தன் வசம் இருந்த பிராண்டுகளை விற்பனை செய்தது பிஸ்லரி. இந்தியாவில் இருந்து பன்னாட்டு நிறுவனமாக அது வளர்ச்சி பெற்றது. அதனை ரமேஷ் சவுகான் நிறுவி இருந்தார். தொடர்ந்து தங்கள் வணிகத்தை விரிவு செய்யும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை பிஸ்லரி நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், பிஸ்லரி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வளாகத்திலிருந்து, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குடிநீரின் மாதிரி ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டது. அதில் பரிந்துரைக்கப்பட்ட அளவினை காட்டிலும் புரோமேட் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. இது 2006-ம் ஆண்டின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது என்று உணவு பாதுகாப்பு ஆணையம் கூறியது.
அந்நிறுவனத்தின் மேல்முறையீட்டின் படி, அந்த மாதிரி பரிந்துரைக்கப்பட்ட உணவு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வகமும், பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் போன்ற ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், அதனை பாதுகாப்பற்றது என உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவித்தது.
இதன் காரணமாக அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரவும் அனுமதி அளித்துள்ளது உணவு பாதுகாப்பு ஆணையம். இருப்பினும் சோதனை மேற்கொண்டது எந்த வேரியண்டுக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. இதை சமூக வலைதளத்தில் உணவு பாதுகாப்பு ஆணையம் பகிர்ந்துள்ளது.