கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவை கடந்த மாதம் 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடைந்த பின், பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், கோவை நகரின் அடையாளமாக மாறவுள்ள செம்மொழிப் பூங்காவில் உணவகம், வாகன நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாடும் இடம், கட்டண வளாக கட்டிடம் போன்றவற்றை தனியாருக்கு மாத மற்றும் ஆண்டு குத்தகைக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
செம்மொழிப் பூங்காவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வார்கள் என்பதால், இந்த பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் அதிகபட்ச ஏலத்தில் குத்தகை உரிமங்களைப் பெற்றுள்ளனர்.
சுற்றுச்சூழல் உணவகம்: செம்மொழிப் பூங்கா வளாகத்தில் 6253 சதுர அடி பரப்பளவில், சுற்றுச்சூழல் உணவகம் அமையவுள்ளது. இந்த உணவகத்திற்கு மாத வாடகையாக, ரூ.6 லட்சத்து 37 ஆயிரத்து 608 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், ஒப்பந்ததாரர் உணவகம் நடத்த ‘மாத வாடகையாக ரூ. 23 லட்சத்து 35 ஆயிரம் என பொது ஏலம் கோரியுள்ளார்.
செம்மொழிப் பூங்காவில் 17 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு, ஆண்டுக்கு ரூ.43.50 லட்சம் என அரசு குத்தகை நிர்ணயம் செய்து இருந்தது. ஆனால், பொது ஏலத்தில் ரூ.90 லட்சத்திற்கு தனியார் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
குழந்தைகள் விளையாடும் இடம்: செம்மொழிப் பூங்காவில் 14 ஆயிரம் சதுர அடியில் குழந்தைகள் விளையாடும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு ஆண்டுக்கு ரூ.33.18 லட்சம் குத்தகைத் தொகையாக அரசு நிர்ணயம் செய்திருந்த நிலையில், பொது ஏலத்தில் ரூ.33.40 லட்சத்திற்கு ஒருவர் ஏலம் பெற்றுள்ளார்.
பூங்கா வளாகத்தில் 3433 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள கட்டண வளாக கட்டிடத்தை ஆண்டுக்கு ரூ.41.70 லட்சத்திற்கும், 4197 சதுர அடி பரப்பளவிலான கட்டண வளாக கட்டிடத்தை ஆண்டுக்கு ரூ.50.96 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செம்மொழிப்பூங்காவில் சுற்றுச்சூழல் உணவகம், வாகன நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாடும் பகுதி, இரு கட்டண வளாகங்கள் ஆகியவை அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட பல மடங்கு கூடுதலாக ஏலத்தில் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து குத்தகை இனங்களுக்கும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுமக்கள் பாதிக்காத வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.