புதுடெல்லி: இந்தியாவில் தனது விநியோகக்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஊழியர்களின் நலன் சார்ந்த திட்டங்களை விரிவுபடுத்தவும் ரூ.2,800 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் 35 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 3 லட்சம் கோடி) முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போது ரூ.2,800 கோடி (300 மில்லியன் டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் தொகையானது அமேசான் நிறுவனத்தின் விநியோக மையங்களை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமாகப் பொருட்களை விநியோகிக்கும் குயிக் காமர்ஸ் சேவையை விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்படும்.
ஊழியர்கள் பாதுகாப்பு, உடல்நலம் முதலீட்டின் மற்றொரு முக்கியப் பகுதியாக, ஊழியர்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் நிதி சார்ந்த நலத் திட்டங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, ‘புராஜெக்ட் ஆஷ்ரே’ போன்ற நலத்திட்டங்கள், மருத்துவ மற்றும் விபத்துக் காப்பீட்டு வசதிகள் போன்றவை விரிவு படுத்தப்படும். கடந்த 2025-ம் ஆண்டில் அமேசான் நிறுவனம் மேற்கொண்ட ரூ.2,000 கோடி முதலீட்டின் மூலம், இந்தியாவில் 17 புதிய சேமிப்புக் கிடங்குகள், 6 தரம் பிரிக்கும் மையங்கள் மற்றும் 75 விநியோக நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
இதுகுறித்து அமேசான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மண்டல செயல்பாட்டுத் துறை துணைத் தலைவர் அபினவ் சிங் கூறுகையில், “அமேசான் 2013-ல் இந்தியாவில் கால் பதித்தது முதல், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சேவையை வழங்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
எங்களது இந்த வெற்றிக்குக் காரணமான ஊழியர்களின் நலனை உறுதி செய்வதே எங்களது முதன்மை நோக்கம்.புதிய முதலீட்டின் மூலம் தொழில் நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு இன்னும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பொருட்கள் சென்றடைய வழிவகை செய்யப்படும்” என்றார்.