புவனேஸ்வர்: இந்தியாவில் நில உரிமை மற்றும் நிலப் பரிவர்த்தனைகளில் உள்ள சட்ட சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நாட்டின் முதல் நில மேலாண்மை தளமான ‘தி லேண்ட் பேங்கர்ஸ்’ ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக புவனேஸ்வரில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோர் பூங்காவில் தனது முதல் அலுவலகத்தையும், கட்டாக் நகரின் தெலங்கபெந்தா பகுதியில் இரண்டாவது கிளையையும் இந்நிறுவனம் நிறுவியுள்ளது.
இந்தியாவில் நிலப் பரிவர்த்தனைகளின் போது போலி ஆவணங்கள் தயாரித்தல், தவறான நிலப் பதிவுகள் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்களால் பல ஆண்டுகளாகத் தொடரும் நிலப் பிரச்சினைகள் சொத்து உரிமையாளர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, முதலீட்டாளர்களையும் பின்வாங்கச் செய்கின்றன.
இத்தகைய முக்கியப் பிரச்சினைகளுக்கு அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பான மற்றும் நிரந்தரத் தீர்வை ‘தி லேண்ட் பேங்கர்ஸ்’ தளம் வழங்குகிறது. இந்த இணையதளப் பக்கத்தின் மூலம் பயனர்கள் தங்களது நிலத்தின் உண்மையான நிலவரத்தைச் சரிபார்க்கவும், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் சட்ட ஆவணங்களை ஆய்வு செய்து கண்காணிக்கவும் முடியும்.
மேலும், துல்லியமான சொத்து மதிப்பு மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த சட்ட ஆலோசனைகளையும் இதன் மூலம் பெறலாம். பொதுமக்கள் ஒரே கிளிக்கில் அரசின் அதிகாரப்பூர்வ நிலப்பதிவேடுகளின் சுருக்கத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். இதற்காக ஒடிசா அரசின் ‘பூலேக்’ போன்ற அரசு இணையப் பக்கங்களை எளிதாகப் பயன்படுத்தும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.