குருக்ராம்: சர்வதேச விளையாட்டு ஆடை மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ், ஹரியானா மாநிலம் குருக்ராமில் அமைந்துள்ள தனது இந்தியா டெக் ஹப் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
குருக்ராம் மையத்தில் பணியாற்றும் 700 ஊழியர்களில் 300 முதல் 350 வரையிலான ஊழியர்கள் இந்தப் பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பணிநீக்கம் குறித்த அறிவிப்பு ஊழியர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. மென்பொருள் பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள் மற்றும் தரவுப் பொறியாளர்கள் ஆகியோர் அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் பிரிவினருக்குச் செப்டம்பர் 15 அன்றே பணி விடுவிப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் பிரிவினருக்கு வரும் டிசம்பர் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் அதுவரை பிற மையங்களில் உள்ள ஊழியர்களுக்கு பொறுப்புகளை ஒப்படைப்பதுடன், நிறுவனத்திற்குள்ளேயே பிற பணியிடங்களுக்கு முயற்சி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிசம்பர் 15-க்குள் மாற்றுப் பணி கிடைக்காத பட்சத்தில், அன்றைய தினமே அவர்களின் கடைசி வேலை நாளாக அமையும்.
இந்த நடவடிக்கை குறித்து அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்த்தகத் தேவைகளின் மாற்றத்திற்கேற்பச் செயல்பாட்டு மாதிரியை மாற்றியமைக்கவும், நிறுவனக் கட்டமைப்பை எளிமையாக்கவும் இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான மாறுதல் உதவிகள் வழங்கப்படும் என்றும், இந்திய சந்தை தங்களுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.