மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’ (ஆர்சிபி) அணியை வாங்கும் திட்டத்தில் சீரம் மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சாம்பியனாக உள்ளது ஆர்சிபி. 17 சீசன்களாக பட்டம் வெல்ல முடியாமல் இருந்த ஆர்சிபி அணி, கடந்த சீசனில் (18-வது ஐபிஎல் சீசன்) முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 10 ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணிகளில் ஒன்றாக ஆர்சிபி அறியப்படுகிறது. இந்நிலையில், இந்த அணியின் உரிமையை கைமாற்றும் திட்டத்தில் உரிமையாளர்கள் இருப்பதாக தகவல்.
ஃபோர்ப்ஸ் இந்தியாவின் தரவுகளின் அடிப்படையில் ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 105 மில்லியன் டாலர்கள் என தகவல். இந்நிலையில், ஆர்சிபி அணியின் உரிமையை கைமாற்றும் முயற்சியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்போதைய உரிமையாளராக உள்ள யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிட்டெட் நிறுவனம் தொடங்கியதாக தெரிகிறது. இந்நிறுவனம், இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து ஆர்சிபி அணியின் உரிமையை வாங்கி இருந்தது.
இந்த சூழலில் ஆர்சிபி அணியின் உரிமையை வாங்க சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. இத்தகைய நிலையில்தான் ஆர்சிபி அணியை வாங்கும் திட்டத்தை ஆதார் பூனாவல்லா வெளிப்படுத்தி உள்ளார்.
“ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த அணிகளில் ஒன்றான ஆர்சிபி அணியை ஏலத்தில் பெறுவதற்கான முயற்சியை வலுவாக மேற்கொள்ள உள்ளோம்” என ஆதார் பூனாவல்லா ட்வீட் செய்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், உயிரிழப்புகள் காரணமாக அணியின் உரிமையை கைமாற்றும் திட்டத்தை அணியின் தற்போதைய உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்.
மேலும், வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் தங்களது ஹோம் ஆட்டங்களை பெங்களூருவுக்கு வெளியே புனே, மும்பை, ராய்ப்பூரில் நடத்தவும் ஆர்சிபி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த சீசனுக்கான ஆட்டங்களை ஆர்சிபி அணி பெங்களூருவில் நடத்தலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் அங்குள்ள பாதுகாப்பு சூழலை அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்.