வணிகம்

மத்திய பட்ஜெட் 2023-24 | முக்கிய அம்சங்கள் 4 - வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு; புதிய முறையில் ரூ.7 லட்சம் வரை வரி இல்லை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.50,000 அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. வரி விதிப்பு விவரம்:

  • ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி இல்லை.
  • ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5% வரி.
  • ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீதம் வரி.
  • ரூ,12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவீதம் வரி
  • ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதம் வரி

புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில், ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் 20 சதவீதத்துக்கும் குறைவானர்களே புதிய வருமான வரி முறையை பின்பற்றுவதாக தெரிகிறது. இந்த முறையில் வருமான வரிப் பிரிவு 80C மற்றும் 80D-யின் கீழ் வருமான வரிச் சலுகை கிடையாது. புதிய வருமான வரி முறையில் சம்பளதாரரின் ஆண்டு மொத்த சம்பளமும் (Annual gross salary) மொத்த வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. இதனால், வரிவிகிதம் குறைவாக இருந்தும் கூட, கட்ட வேண்டிய வரி அதிகமாக இருப்பதால், புதிய வரிக் கொள்கையானது சம்பளதாரர்களுக்கு லாபகரமாக இல்லை என்ற கருத்தும் உள்ளது.

புதிய வருமான வரி முறையைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே ரூ.5 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை. இந்த வரம்புதான் தற்போது உயர்த்தபட்டுள்ளது. இனி ரூ.7 லட்சத்துக்குள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை.

வரி உயர்வு எவற்றிற்கு?

  • சிகரெட் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.
  • தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
  • தங்கக் கட்டியில் செய்யப்பட்ட பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிப்பு.
  • சமையலறை சிம்னி சுங்க வரி 15 சதவீதம் அதிகரிப்பு.
  • ரப்பர் மீதான இறக்குமதி வரி 25 சதவீதமாக அறிவிப்பு.

வரி குறைவு எவற்றிற்கு?

  • டிவி பேனல்கள் மீதான வரி 2.5 சதவீதம் குறைக்கப்படும்.
  • செல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
  • ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படும்.
  • இறால் உணவுகள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி குறைக்கப்படுகிறது.
SCROLL FOR NEXT