எங்கு திரும்பினாலும் மக்கள் விலைவாசி உயர்வு குறித்து புலம்பிக்கொண்டிருக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தள்ளுவண்டிக் கடைகளில் ஒரு இட்லியின் விலை ரூ.7 ஆக இருந்தது. இப்போது அது ரூ.10. டீயின் விலை ரூ.10 ஆக இருந்தது. இப்போது ரூ.12. சென்னை - திருநெல்வேலி தனியார் பேருந்து கட்டணம் ரூ.700 ஆக இருந்தது. இப்போது ரூ.1500. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
கால ஓட்டத்துக்கு ஏற்ப விலைவாசி உயர்வது இயல்பானதுதான். ஆனால், அதற்கேற்ற வகையில் மக்களின் வருமானம் உயர்ந்திருக்கிறதா? இல்லை. இந்தச் சூழலில்தான் விலைவாசி உயர்வால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திணறுகின்றனர்.
ஏன் இந்த நிலை? - கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் ‘பணவீக்கம்’ என்ற வார்த்தை அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. பொருள்களின் விலை உயர்வதுதான் பணவீக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது பணத்துக்கான மதிப்பு குறைந்துவிடுகிறது. இந்தியாவில் பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது உச்சம் தொட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.79 சதவீதமாக உள்ளது.
இந்தியாவும் விலைவாசி உயர்வும்: இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் அத்தியாவசிய தேவைகளின் விலைவாசி அச்சுறுத்தும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. பணவீக்கம் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுவதுண்டு. பயிர்விளைச்சல் பாதிக்கப்படும் போது அந்தக் குறிப்பிட்ட பயிருக்கான விலை உயரும். அதன் உற்பத்தி அதிகரிக்கும்போது விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால், சில விலை உயர்வு நிரந்தரமாக மாறிவிடும். உதாரணத்துக்கு சாப்பாட்டை எடுத்துக் கொள்வோம். தற்போதைய சூழலைக் காரணம் காட்டி டீ விலை ரூ.12 என உயர்த்தப்படுகிறது என்றால், நிலவரம் சரியானதும் யாரும் அந்த விலையைக் குறைப்பதில்லை.
இதில் துயரமான விஷயம் என்னவென்றால், இந்த விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மக்களின் ஊதியம் உயரவில்லை. கரோனா காலத்தில் பலர் வேலையிழப்பைச் சந்தித்தனர்.
வருவாய் ஏற்றத்தாழ்வு: மத்திய அரசு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு உலகளாவிய சூழலைக் காரணம் காட்டித் தப்பிக்க முயல்கிறது. ஆனால், இந்தியாவில் விலைவாசி உயர்வு என்பது வருவாய் ஏற்றத்தாழ்வுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தியாவில் பொருளாதாரரீதியாக மேல் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த வருவாயில் 57 சதவீதம் செல்கிறது என்றும் பொருளாதாரரீதியாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் நாட்டின் மொத்த வருவாயில் 13 சதவீதம் மட்டுமே செல்கிறது என்றும் ‘உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022’ குறிப்பிடுகிறது.
மேலும், இந்தியாவில் நடுத்தர மற்றும் கீழ் வர்க்கத்தினர் தங்கள் தகுதிக்கு மீறி வரி கட்டிவருவதாகவும், பில்லியனர்களிடம் அவர்களின் வருவாய்க்கு பொருத்தமான வரி வசூலிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மாத சம்பளதாரர்கள் பிரிவை எடுத்துக்கொள்வோம். ஐடி துறையில் வழங்கப்படும் ஊதியத்துக்கும் ஏனைய துறைகளில் வழங்கப்படும் ஊதியத்துக்கும் அவ்வளவு வேறுபாடு நிலவுகிறது.
ஐடி துறையில் ஐந்து ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர் இன்று ரூ.1 லட்சம் சம்பளம் ஈட்டக்கூடும். அதுவே வேறு துறையில் அதே ஆண்டுகால அனுபவம் கொண்டவர் மாதம் ரூ.40,000 வருமானம் ஈட்டுவதே அதிகபட்சம்.
ஆனால், ஐடி துறையில் வழங்கப்படும் ஊதியத்தையேஇந்தியாவின் சராசரி ஊதியமாக பார்க்கும் போக்கு நிலவுகிறது. விளைவாக, ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் பொருளாதாரம் - வாழ்க்கைத் தரம் கட்டமைப்பு என்பது மேல்தட்டு மக்களை மையப்படுத்தியதாகவே இருக்கிறது. ஐடி துறையில் பணிபுரிவர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்க்க முடிகிறது. நல்ல மருத்துவ வசதியைப் பெற முடிகிறது. இந்த வருவாய் ஏற்றத்தாழ்வு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசு வரி நிர்ணயம் செய்யும்போது கூட சாமான்ய மக்களைக் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. பெரும் பணக்காரர்களுக்கு சாதகமான வகையிலே பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வு சரி செய்யப்படாதவரையில் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மீட்சியில்லை!
> இது, முகம்மது ரியாஸ் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்