விலைவாசி உயர்கிறது... ஆனால், வருமானம்?

விலைவாசி உயர்கிறது... ஆனால், வருமானம்?
Updated on
3 min read

எங்கு திரும்பினாலும் மக்கள் விலைவாசி உயர்வு குறித்து புலம்பிக்கொண்டிருக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தள்ளுவண்டிக் கடைகளில் ஒரு இட்லியின் விலை ரூ.7 ஆக இருந்தது. இப்போது அது ரூ.10. டீயின் விலை ரூ.10 ஆக இருந்தது. இப்போது ரூ.12. சென்னை - திருநெல்வேலி தனியார் பேருந்து கட்டணம் ரூ.700 ஆக இருந்தது. இப்போது ரூ.1500. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மளிகை சாமான்கள், காய்கறி என வீட்டுச் செலவுக்கென்று மாதம் ரூ.12,000 ஒதுக்கியவர்கள் இன்று ரூ.17,000 ஒதுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கால ஓட்டத்துக்கு ஏற்ப விலைவாசி உயர்வது இயல்பானதுதான். ஆனால், அதற்கேற்ற வகையில் மக்களின் வருமானம் உயர்ந்திருக்கிறதா? இல்லை. இந்தச் சூழலில்தான் விலைவாசி உயர்வால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திணறுகின்றனர்.

ஏன் இந்த நிலை?

கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் ‘பணவீக்கம்’ என்ற வார்த்தை அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. பொருள்களின் விலை உயர்வதுதான் பணவீக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது பணத்துக்கான மதிப்பு குறைந்துவிடுகிறது. இந்தியாவில் பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது உச்சம் தொட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.79 சதவீதமாக உள்ளது. இறுதியாக, 2014 மே மாதத்தில் பணவீக்கம் 8.33 சதவீதமாக இருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, கனடா, ஜெர்மனி என உலக அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

அர்ஜென்டைனா மற்றும் துருக்கியில் பணவீக்கம் நாட்டையே முடக்கும் அளவில் அதிகரித்துள்ளது. தற்போது உலக அளவில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதற்கு அடிப்படையாக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்
படுகின்றன. ஒன்று, கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு உலக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட நெருக்கடி. மற்றொன்று, ரஷ்யா - உக்ரைன் போர்.

கரோனா ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு, ஒரே நேரத்தில் மக்களின் நுகர்வுத் தேவை பல மடங்கு அதிகரித்தது. ஆனால், அந்தத் தேவையை பூர்த்தி செய்யும்வகையில் பொருட்களை விநியோகம் செய்ய முடியவில்லை. சரக்குகளை உரிய இடத்துக்கு கொண்டு சேர்க்க முடியாமல் உலகின் விநியோகக் கட்டமைப்புத் திணறியது. தேவை அதிகரித்து விநியோகம் குறையும்போது பொருட்களின் விலை உயரும். அவ்வாறாக,பொருட்களின் விலை உயரத் தொடங்கியது.
இந்தச் சூழலை இன்னும் தீவிரப்படுத்தியது ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர். கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தாக்குதலைத் தொடங்கியது.

இதையெடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது தானாகவே நுகர்வுப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிடும். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியது மட்டுமல்ல, உலகளாவிய உணவுத் தட்டுப்பாட்டுக்கும் வழிவகுத்துள்ளது. கோதுமை, சமையல் எண்ணெய், உரம் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கிய இடத்தில் உள்ளன.

உலகளாவிய கோதுமை விநியோகத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைனின் பங்கு 28% ஆகும். உலகளாவிய பார்லி விநியோகத்தில் 29%, சோளம் விநியோகத்தில் 15%, சூரியகாந்தி எண்ணெய் விநியோகத்தில் 70 % அவ்விரு நாடுகள் பங்குவகிக்கின்றன. போர் காரணமாக இந்த ஏற்றுமதி தடைபட்டது. ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக, லெபனான், துனிஷியா, லிபியா, எகிப்து ஆகிய நாடுகள் கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.

தற்போதைய உணவுத் தட்டுப்பாட்டுக்கு ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் மட்டுமல்ல, பருவநிலை மாற்ற
மும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சீனாவில் பெய்த கன மழையால் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதேபோல், இந்தியாவில் வெப்ப அலை உச்சம் காரணமாக கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தச் சூழலில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தியாவும் விலைவாசி உயர்வும்

இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் அத்தியாவசிய தேவைகளின் விலைவாசி அச்சுறுத்தும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. பணவீக்கம் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுவதுண்டு. பயிர்விளைச்சல் பாதிக்கப்படும் போது அந்தக் குறிப்பிட்ட பயிருக்கான விலை உயரும். அதன் உற்பத்தி அதிகரிக்கும்போது விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால், சில விலை உயர்வு நிரந்தரமாக மாறிவிடும். உதாரணத்துக்கு சாப்பாட்டை எடுத்துக் கொள்வோம். தற்போதைய சூழலைக் காரணம் காட்டி டீ விலை ரூ.12 என உயர்த்தப்படுகிறது என்றால், நிலவரம் சரியானதும் யாரும் அந்த விலையைக் குறைப்பதில்லை. 2014 ஜனவரி முதல் 2022 மார்ச் வரையில் ஒவ்வொரு மாதமும் உணவுப் பொருட்களின் விலை 4.48 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2013-ல் ரூ.100ஆக இருந்த உணவுப் பொருளின் விலை இப்போது ரூ.170.

அதேபோல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த எட்டு ஆண்டுகளில் உச்சம் தொட்டுள்ளது. 2014 மே மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71 ஆக இருந்தது. 2022 ஏப்ரல் மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலர். ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தொட்டது. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு மத்திய அரசு கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.10 என்ற அளவில் குறைத்தது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட போக்குவரத்துக் கட்டணத்தை இனி யாரும் குறைக்கப்போவதில்லை.

இதில் துயரமான விஷயம் என்னவென்றால், இந்த விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மக்களின் ஊதியம் உயரவில்லை. கரோனா காலத்தில் பலர் வேலையிழப்பைச் சந்தித்தனர். பலர் ஊதியக் குறைப்பை எதிர்கொண்டனர். இந்தச் சூழலில் விலைவாசி உயர்வு மக்களின் கழுத்தை நெறிக்கிறது. விளைவாக, மக்கள் தங்கள் நுகர்வைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை மட்டும் சாப்பாட்டுக்குப் பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

வருவாய் ஏற்றத்தாழ்வு

மத்திய அரசு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு உலகளாவிய சூழலைக் காரணம் காட்டித் தப்பிக்க முயல்கிறது. ஆனால், இந்தியாவில் விலைவாசி உயர்வு என்பது வருவாய் ஏற்றத்தாழ்வுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தியாவில் பொருளாதாரரீதியாக மேல் நிலையில் உள்ள 10 சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த வருவாயில் 57 சதவீதம் செல்கிறது என்றும் பொருளாதாரரீதியாக கீழ் நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் நாட்டின் மொத்த வருவாயில் 13 சதவீதம் மட்டுமே செல்கிறது என்றும் ‘உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022’ குறிப்பிடுகிறது.

மேலும், இந்தியாவில் நடுத்தர மற்றும் கீழ் வர்க்கத்தினர் தங்கள் தகுதிக்கு மீறி வரி கட்டிவருவதாகவும், பில்லியனர்களிடம் அவர்களின் வருவாய்க்கு பொருத்தமான வரி வசூலிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மாத சம்பளதாரர்கள் பிரிவை எடுத்துக்கொள்வோம். ஐடி துறையில் வழங்கப்படும் ஊதியத்துக்கும் ஏனைய துறைகளில் வழங்கப்படும் ஊதியத்துக்கும் அவ்வளவு வேறுபாடு நிலவுகிறது.

ஐடி துறையில் ஐந்து ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர் இன்று ரூ.1 லட்சம் சம்பளம் ஈட்டக்கூடும். அதுவே வேறு துறையில் அதே ஆண்டுகால அனுபவம் கொண்டவர் மாதம் ரூ.40,000 வருமானம் ஈட்டுவதே அதிகபட்சம். அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம். இந்திய மக்கள் தொகையில் 42 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 50 லட்சம் பேர்தான் ஐடி துறையில் வேலை பார்க்கின்றனர்.

ஆனால், ஐடி துறையில் வழங்கப்படும் ஊதியத்தையேஇந்தியாவின் சராசரி ஊதியமாக பார்க்கும் போக்கு நிலவு
கிறது. விளைவாக, ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களின் வருமானத்தை அடிப்படையாகக்கொண்டே பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இந்தியாவில் பொருளாதாரம் - வாழ்க்கைத் தரம் கட்டமைப்பு என்பது மேல்தட்டு மக்களை மையப்படுத்தியதாகவே இருக்கிறது. ஐடி துறையில் பணிபுரிவர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்க்க முடிகிறது. நல்ல மருத்துவ வசதியைப் பெற முடிகிறது. இந்த வருவாய் ஏற்றத்தாழ்வு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசு வரி நிர்ணயம் செய்யும்போது கூட சாமான்ய மக்களைக் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.பெரும் பணக்காரர்களுக்கு சாதகமான வகையிலே பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. இந்த ஏற்றத்தாழ்வு சரி செய்யப்படாதவரையில் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மீட்சியில்லை!

riyas.ma@hindutamil.co.in​​​​​​​

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in