வணிகம்

கிரெடிட் கார்டுகளுடன் Buy Now Pay Later வேறுபடுவது எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

செய்திப்பிரிவு

கிரெடிட் கார்டுகளுக்கு போட்டியாக இப்போது கிளம்பியிருப்பது கவர்ச்சிகரமான (Buy Now Pay Later) என்கிற `இப்போது வாங்குகள் பிறகு செலுத்துங்கள்` என்கிற திட்டமாகும். இதை வங்கிகள் மட்டுமல்லாமல் அமேசான் பே லேட்டர், பிளிப்கார்ட் பே லேட்டர், லேஸிபே, போஸ்ட்பே போன்ற பல நிறுவனங்கள் இந்த வசதியை வழங்கி வருகின்றன.

இந்தத் திட்டம் தற்போது இளைஞர்களிடம் அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. சில கிரெடிட் கார்டோடு பிஎன்பிஎல்லும் சேர்ந்தே இருக்கும். குறைந்த விலையுள்ள பொருள்களை வாங்கி அதற்கானத் தொகையை வட்டியில்லாமல் சுமார் 15 நாட்களுக்குள் செலுத்தும் வசதியை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இருப்பினும் கிரெடிட் கார்டுக்கும் பிஎன்பிஎல் கார்டுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமை இப்போது வாங்கிக் கொண்டு பிறகு பணம் செலுத்தலாம் என்பதுதான். எனினும் இந்த இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.

> கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் நிலுவைப் பணத்தை வட்டியில்லாமல் செலுத்துவதற்கான அவகாசம் சுமார் 45 நாட்கள் ஆகும். பிஎன்பிஎல்லில் இது 15 நாட்கள் முதல் 35 நாட்கள் ஆகும்.

> கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பதற்கான உச்சவரம்பு பயனளாரின் நிதிநிலைமையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். ஆனால் பிஎன்பிஎல்லில் இது ரூ.10,000 முதல் ரூ.60,000 வரையாகும்.

> கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தால் அது பல காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படுவதால் ஒருவருக்கு வழங்கப்படுமா, மறுக்கப்படுமா என்று தெரிவதற்கு 2-3 வாரங்கள் ஆகலாம். ஆனால் பிஎன்பிஎல் கார்டுக்கென்று கடினமான தகுதிக் காரணிகள் எதுவுமில்லை என்பதோடு மிக சீக்கிரமாகவே வழங்கப்பட்டுவிடும்.

> சில கிரெடிட் கார்டுகள் சேர்ப்புக் கட்டணம், ஆண்டுக் கட்டணம் என சில ஆயிரம் ரூபாய்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும். ஆனால் பிஎன்பிஎல் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

> கிரெடிட் கார்டில் இருக்கும் நிலுவைத் தொகை முழுவதையும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கட்டவில்லையெனில் வட்டி வசூலிக்கப்படும். இது சுமார் ஆண்டுக்கு சுமார் 30-36 சதவிகிதமாகும். ஆனால் பிஎன்பிஎல் கார்டு திட்டத்தின் கீழ் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை ஆனால் திருப்பிச் செலுத்த நீண்ட நாட்கள் ஆகும்பட்சத்தில் தாமதக் கட்டணம் என்கிற பெயரில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

> கிரெடிட் கார்டை பலதரப்பட்ட வணிக நிறுவனங்களும் அமைப்புகளும் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளும். ஆனால் பிஎன்பிஎல் கார்டுகளில் அந்த நெகிழ்வுத் தன்மையும் ஏற்புத் தன்மையும் இல்லை.

இதுமட்டுமல்லாமல் சில வங்கிகள் பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு கடன் அட்டைகளையும் (co-branded) வழங்கி வருகின்றன. இதுவும் தற்போது அதிகஅளவில் பிரபலமாகி வருகிறது.

மொத்தத்தில் கிரெடிட் கார்டுகள் என்பது தேவைபடுவோர், தேவைக்கு பயன்படுத்தினால் அதிக பயன். அதேசமயம் சரியான புரிதல் இல்லாமலோ, உரிய நிதி மேலாண்மை இல்லாமலோ பயன்படுத்தினால் சிக்கல் ஏற்படும். கிரெடிட் கார்டு மூலம் நெருக்கடிக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் இத்தகையவர்களே.

> இது, நெல்லை ஜெனா எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT