உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் கிரிப்ட்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாக இன்று இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி வெளியிடுபவர்கள் லாபம் பார்க்கின்றனர். கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு லட்சத்தில் இருந்தாலும், அதில் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும் என்பதால் அதில் சிறுசிறு முதலீட்டாளர்களும் கூட முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்களா? அல்லது பணத்தை இழக்கிறார்களா? என்னதான் நடக்கிறது கிரிப்டோ சந்தையில் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஆனால் இவை எதுவும் விடை தேட முடியாத கேள்விகள். காரணம் அதன் தொழில்நுட்பம் அப்படி.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
கிரிப்டோகரன்சி என்றால் டிஜிட்டல் நாணயங்கள் ஆகும். கிரிப்டோகரன்சிகளை போலியாக உருவாக்க முடியாது. பிளாக்செயின் நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கிரிப்டோகரன்சிகள் உருவாக்கப்படுகின்றன. எந்தவொரு அரசின் தலையீடும் கிரிப்டோகரன்சிகளில் செய்ய முடியாது. கிரிப்டோகரன்சிகளுக்கு எல்லைகளும் கிடையாது. சுருக்கமாக கூறினால் யாருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் வராது.
யார் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள் என்ற விவரமும் வெளியே தெரியாது. ஒவ்வொரு கிரிப்டோகரன்சிக்கும் குறிப்பிட்ட மதிப்பு உண்டு. மார்க்கெட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் ஏறி இறங்கும்.
கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்தி பொருட்கள் அல்லது சேவைகளையும் வாங்கிக்கொள்ளலாம். கிரிப்டோகரன்சிகள் மையப்படுத்தப்படாதவை. அதாவது, கிரிப்டோ காயின்களை எந்தவொரு நிறுவனமும் கட்டுப்படுத்துவதில்லை.
பிட்காயின் மட்டும் தானா?
பிட்காயின் மட்டும்தான் கிரிப்டோகரன்சி என பலரும் கருதுகிறார்கள். அதுபோல நூற்றுக்கணக்கான காயின்கள் இருக்கின்றன. முதலில் உருவான பிட்காயினை தொடர்ந்து எத்ரியம் காயின் பிரபலமானது. இது இரண்டுக்கும் தான் நீண்டகாலமாக போட்டியாக இருந்தது. தற்போது டோஜ் காயின் என பலவித கிரிப்ட்டோகரன்சிகள் வந்துவிட்டன.
மோசடியா?
கிரிப்டோகரன்சிகளில் முறைகேடான பணத்தை முதலீடு செய்யவும் முடியும். இது கறுப்புப் பணத்தை புழக்கத்தில் கொண்டுவரும் வழிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. வங்கிகள் மூலமான பரிவர்த்தனைகளில் முறைகேடான, சட்ட விரோதமான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என்பதால் இதுபோன்ற வழிகள் மூலம் அவற்றை செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் இதற்கு தடை விதிக்க அரசுகள் விரும்புகின்றன.
கடுமையாக எதிர்க்கும் இந்தியா
இந்தியாவும் கிரிப்டோகரன்சிகளை கடுமையாக எதிர்க்கிறது. காரணம் டிஜிட்டல் கரன்சியின் ஆதிக்கம் அதிகரித்தால் அதனால் நாட்டின் நாணய மதிப்பும் நாணயத்துக்கான அவசியமும் கேள்விக்குறியாகும். இது இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் உள்ள தயக்கம் தான். கிரிப்டோகரன்சியை வரன்முறைபடுத்த அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.
எதிர்காலம் என்னவாகும்?
கிரிப்டோகரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். ஒரு முதலீட்டாளரைப் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் பணம் ஈட்ட முடியும் என்ற ஆசை உள்ளதோ அதே அளவுக்கு பணத்தை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி செய்த முதலீட்டை பாதுகாப்பாக பெறுவதும் கேள்விக்குரியாகவே உள்ளது. இதனால் கிரிப்ட்டோகரன்சி என்பது விடை தெரியாத புதிராகவே தொடர்கிறது.
> இது, நெல்லை ஜெனா எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்