வருமான வரித் துறை எடுத்த உடனேயே தடாலடியாக ஒருவரது வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்துவிட முடியாது. செய்யவும் செய்யாது. வருமான வரித் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்குட்பட்டது.
சட்டத்திற்குட்பட்டது: வருமான வரி சட்டம் பிரிவு 132-ன் படி ஒருவரது வீட்டைச் சோதனையிட அனுமதித்தாலும், அதற்கு முன்பாக பல நடைமுறைகள் அவர்கள் கடைபிடிக்கப்பட வேண்டும். முதலில் யார் வீட்டில் அல்லது நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனையிட முடிவு செய்திருக்கிறார்களோ, அவர்கள் வரிமான வரி தாக்கல் செய்திருக்கிறார்களா என்பதை வருமான வரித் துறை சரிபார்த்து, அதற்கான ஆவணங்களை எடுத்து வைத்துக்கொள்ளும்.
ஒருவேளை ஒருவர் ஆண்டுதோறும் அதிகமான அளவு வருமான வரி தாக்கல் செய்துவிட்டு, திடீரென சில ஆண்டுகள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், அப்போது அவர் வீட்டில் சோதனை நடத்த அது காரணமாக அமையலாம்.
தகவலை மறைக்க வேண்டாம்: இரண்டாவதாக, ஒருவர் ரூ.8 கோடிக்கு சொத்து ஒன்றை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதுகுறித்த தகவல் பத்திரப்பதிவுத் துறை மூலமாக வருமான வரித்துறைக்குச் சென்றிருக்கும். ஆனால், அவர் தாக்கல் செய்த வருமான விபரங்களில் அந்த சொத்து குறித்த தகவல் இல்லை என்றால், அதன் அடிப்படையில் சோதனையில் ஈடுபடலாம்.
அதேபோல சோதனைக்கு செல்லும் முன்பாக சோதனை மேற்கொள்ள இருக்கும் நபர் என்ன தொழில் செய்கிறார், அவரது தற்போதைய பொருளாதார நிலை என்ன, அவர் தொடர்ந்து வரி செலுத்துபவரா, அவர் தாக்கல் செய்திருக்கும் வருமானத்திற்கும் அவரின் வாழ்க்கை முறைக்கும் ஒத்துப்போகிறதா என்று பல விஷயங்களை வருமான வரித் துறையினர் பார்ப்பார்கள்.
அப்படி அனைத்து விஷயங்களையும் பார்த்த பிறகு, இந்த விவகாரத்தில் கணக்கில் காட்டப்படாத வருமானம் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட நபரின் இருப்பிடத்திற்கு வருமான வரி சோதனைக்குச் செல்வார்கள். அப்போதும் அனைத்து விஷயங்களும் அமைதியான முறையில் தான் நடைபெறும். கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டறியப்பட்டால் அதற்கு வரி கணக்கிட்டு அதனைக் கட்டவும், அபராதம் கட்டவுமே அந்த நபர் பணிக்கப்படுவார்.
சந்தேகம் இருந்தால் சோதனை: பொதுவாக, எந்தக் குறிப்பிட்ட பணப்பரிமாற்றத்தின் மீது வருமான வரித் துறைக்கு சந்தேகம் வருகிறதோ, அந்தக் குறிப்பிட்ட வருமானம் அல்லது செலவு பற்றி மட்டுமே விளக்கம் கேட்கப்படும். உதாரணாமாக, மாதம் ரூ.50,000 வருமானம் உள்ள ஒருவர், திடீரென அந்த நிதியாண்டில் ரூ.5 அல்லது ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்தை வாங்கவோ, விற்கவோ செய்தால், அந்தக் குறிப்பிட்ட சொத்து பற்றி மட்டும் தான் விளக்கம் கேட்பார்கள்.
இதற்கு என்ன அர்த்தம் என்றால், குறிப்பிட்ட நிதியாண்டில் அதிக அளவு மதிப்பீட்டில் ஒருவருடைய 'பான் எண்' சம்மந்தப்பட்டிருந்தால், அப்போது அந்தப் பரிமாற்றம் குறித்து வருமான வரித் துறையில் இருந்து விளக்கம் கேட்கப்படும்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்