வருமான வரி சோதனை நடத்தப்படுவது எப்படி? - A to Z தெளிவுப் பார்வை

வருமான வரி சோதனை நடத்தப்படுவது எப்படி? - A to Z தெளிவுப் பார்வை
Updated on
4 min read

தமிழ் சினிமாவின் பல படங்களில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாமல் காட்டப்படும் நீதிமன்ற காட்சிகளைப் போன்றதுதான் வருமான வரி சோதனை காட்சிகளும். யாராவது ஒருவர் புகார் தெரிவிக்க உடனே ஒரு குழு சென்று "வீ ஆர் ஃப்ரம் இன்கம் டாக்ஸ் ஆபிஸ்" என அடையாள அட்டையை நீட்டும் ஒரு வட்டத்திற்குள் இருந்து வெளிவரவே இல்லை. அந்த அளவிற்கு ரஜினியின் ‘சிவாஜி’ தொடங்கி தனுஷின் ‘திருவிளையாடல்’ வரையில் தமிழ் சினிமா அடித்து துவைத்த ஹைக்ளாஸ் பழிவாங்கும் படலம் வருமான வரி சோதனை என்றால் மிகையில்லை என்றே தோன்றுகிறது.

உண்மையில் வருமான வரி சோதனை என்றால் என்ன? எந்தெந்த சூல்நிலைகளில் ஒருவர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தும்? வருமான வரி தாக்கல் செய்தாலும் சோதனை செய்ய வருவார்களா?

- இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...

"வருமான வரித் துறை என்று சொன்னதும் நம் மனதில் சில கேள்விகள் வரும். எனது வருமானத்தில் பெரிய வீடோ சொத்தோ நான் வாங்கும்போது, அது குறித்த விபரம் வருமான வரித் துறைக்கு எப்படித் தெரியும்? நான் சொல்லாமல் அவர்களாகவே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? நான் தகவல் தெரிவிக்காமல் மறைத்தால் என்னவாகும்? - இவை அனைவருக்கும் இயல்பாக இருக்கும் சந்தேகங்கள்.

எப்போதும் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். வருமான வரித் துறையை பொறுத்தவரையில், பல முனைகளில் இருந்து அவர்களுக்கு தகவல்கள் வந்து கொண்டே இருக்கும். அதாவது, பணப் பரிமாற்றம் அதிகமாக நடைபெறும் எல்லா இடங்களில் இருந்தும் வருமான வரித் துறைக்கு தகவல்கள் சென்றுகொண்டே இருக்கும். சரி, எங்கே எல்லாம் அதிகமான பணப் புழக்கம் அதிகமாக இருக்கும்? - இது அடுத்த கேள்வி.

பதிவுத்துறை முதல் பங்குச்சந்தை வரை: முதலில் பத்திரப்பதிவு அலுவலகம். இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்தும் வருமான வரித் துறைக்கு தகவல் பரிமாறப்படும். இரண்டாவதாக வங்கிகள். வங்கிகளில் இருந்து யாருடைய கணக்கில் இருந்து ரூ.50,000-க்கு மேல் பரிமாற்றம் நடக்கும்போது, அதுபற்றி தகவல் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும். வங்கி மூலமாக நடைபெறும் அனைத்து விதமான பணப்பரிமாற்றங்கள் பற்றிய தகவல்கள் வருமான வரித் துறைக்கு சென்று விடும்.

அடுத்ததாக பங்கு சந்தை. பங்குகள் வாங்குவது, விற்பது குறித்த தகவல்கள் வருமான வரி துறைக்குத் தெரிவிக்கப்படும். அதன் பிறகு அதிக மதிப்புடைய பொருள்களை வாங்கும் போதும் அது குறித்த தகவல் வருமான வரித் துறைக்கு சென்றுவிடும். எளிதாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்தியாவிற்குள் அதிக தொகை செலவு செய்து ஒரு பொருள் வாங்கவோ, விற்கவோபடுகிறது என்றால், அதுகுறித்த தகவல் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்

ரேண்டம் தேர்வு: இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, அத்தனை செயல்பாடுகளையும் சரிபார்க்கும் வசதி சாத்தியம் இல்லாத ஒன்று. அப்படியானால் என்ன செய்வார்கள்? அத்தனை நடவடிக்கைகளில் இருந்தும் ரேண்டமாக சிலவற்றைத் தேர்வு செய்வார்கள். உதாரணமாக, மாதம் ரூ.50,000 வருமானம் உள்ள ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சமாக இருக்கும். அந்த நிதியாண்டில் அவரது வங்கிக் கணக்கில் ரூ.60 லட்சம் வந்து சேர்கிறது என்றால், அந்தக் கணக்கு ரேண்டம் தேர்விற்கு வர வாய்ப்பு இருக்கிறது. வருமானங்கள் பற்றிய செய்திகள் வருமான வரித் துறைக்கு சென்றாலும் யாரிடமெல்லாம் விளக்கம் கேட்க வேண்டும் என்பதை வருமான வரித் துறையின் சிஸ்டம் தான் தேர்வு செய்து கொடுக்கும்.

இவை தவிர பிரத்தியேகமாக ஏதாவது புகார் அல்லது தகவல் வருமான வரித்துறைக்கு வருமானால், அவைகள் குறித்தும் விளக்கம் கேட்கப்படும். இப்போதும் நாம் ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வருமான வரித் துறையில் தகவல் ஏதும் இல்லாமல் அவர்கள் விளக்கம் கேட்பதோ ஆய்வு மேற்கொள்வதோ இல்லை. வருமான வரித் துறை கேட்கும் கணக்கும், நாம் தாக்கல் செய்திருக்கும் வரி தாக்கல் கணக்கும் ஒத்துப்போய்விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி இல்லாதபட்சத்தில், அந்தக் கணக்கில் வராத தொகையை வருமானமாக சேர்த்தார்கள் என்றால், அதற்கான வரி கட்ட சொல்வார்கள். மற்றபடி பயப்பட தேவையில்லை.

எப்போது வருமானவரி சோதனை வரும்? - வருமான வரி சோதனை குறித்த ஆவல் நாம் அனைவருக்குள்ளும் இருக்கும். சரி, அது என்ன வருமான வரி சோதனை. வருமான வரித் துறை எடுத்த உடனேயே தடாலடியாக ஒருவரது வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்துவிட முடியாது. வருமான வரித் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்குட்பட்டது.

வருமான வரி சட்டம் பிரிவு 132-ன் படி ஒருவரது வீட்டைச் சோதனையிட அனுமதித்தாலும், அதற்கு முன்பாக பல நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். முதலில் யார் வீட்டில் அல்லது நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனையிட முடிவு செய்திருக்கிறார்களோ, அவர்கள் வரிமான வரி தாக்கல் செய்திருக்கிறார்களா என்பதை வருமான வரித் துறை சரிபார்த்து, அதற்கான ஆவணங்களை எடுத்து வைத்துக்கொள்ளும்.

ஒருவேளை ஒருவர் ஆண்டுதோறும் அதிகமான அளவு வருமான வரி தாக்கல் செய்துவிட்டு. திடீரென சில ஆண்டுகள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், அப்போது அவர் வீட்டில் சோதனைக்கான நடத்த அது காரணமாக அமையலாம். இரண்டாவதாக, ஒருவர் ரூ.8 கோடிக்கு சொத்து ஒன்றை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதுகுறித்த தகவல் பத்திரப்பதிவுத் துறை மூலமாக வருமான வரித் துறைக்குச் சென்றிருக்கும். ஆனால், அவர் தாக்கல் செய்த வருமான விபரங்களில் அந்த சொத்து குறித்த விபரங்கள் இல்லை என்றால், அதன் அடிப்படையில் சோதனையில் ஈடுபடலாம்.

அதேபோல சோதனைக்கு செல்லும் முன்பாக சோதனை மேற்கொள்ள இருக்கும் நபர் என்ன தொழில் செய்கிறார், அவரது தற்போதைய பொருளாதார நிலை என்ன, அவர் தொடர்ந்து வரி செலுத்துபவரா, அவர் தாக்கல் செய்திருக்கும் வருமானத்திற்கும் அவரின் வாழ்க்கை முறைக்கும் ஒத்துப்போகிறதா என்று பல விஷயங்களை வருமான வரித் துறையினர் பார்ப்பார்கள்.

அப்படி அனைத்து விஷயங்களையும் பார்த்த பிறகு, இந்த விவகாரத்தில் கணக்கில் காட்டப்படாத வருமானம் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட நபரின் இருப்பிடத்திற்கு வருமான வரி சோதனைக்குச் செல்வார்கள். அப்போதும் அனைத்து விஷயங்களும் அமைதியான முறையில் தான் நடைபெறும். கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டறியப்பட்டால் அதற்கு வரி கணக்கிட்டு அதனைக் கட்டவும், அபராதம் கட்டவுமே அந்த நபர் பணிக்கப்படுவார்.

ஆவணங்களை எப்படி பாதுகாப்பது?

பெரிய பெரிய நிறுவனங்களும், தொழிலதிபர்களும் தனியாக கணக்கர்களை வைத்து தங்களின் வருமானக் கணக்கு புத்தகங்களை எழுதிப் பாதுகாப்பார்கள். அதேபோல நாமும் எழுத வேண்டுமா, தனிநபர்கள், சிறு நிறுவனங்கள் எப்படி கணக்கு புத்தகங்களை பராமரிப்பது, எல்லா செலவுகளுக்கும் நாம் ஆதாரங்களை சேர்ந்து வைக்க வேண்டுமா போன்ற கேள்விகள் நாம் அனைவருக்கும் வருவதுண்டு. பல நேரங்களில் நாம் செய்த செலவுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதில்லை. இங்கு நாம் பேசுவது 'புக்ஸ் ஆஃப் அக்கவுண்ட்' எனப்படும் கணக்கு புத்தகங்களைப் பற்றி இல்லை. அது வேறு, நமக்கு என்ன வருமானம் வந்தது நாம் என்ன செலவு செய்தோம் என்று வணிகம் சார்ந்த விஷயங்களை எழுதுவது 'புக்ஸ் ஆஃப் அக்கவுண்ட்'. அவைகள் இல்லாமல், நாம் செய்த செய்த செலவுகள் அனைத்துக்குமான ஆதாரங்களை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியமானது. நாம் இதை, புக்ஸ் ஆஃப் அக்கவுண்ட், ஆவணங்களை பாதுகாத்தல் என இரண்டாக புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். இவை இரண்டும் முக்கியமான ஒன்று தான்.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வருமான வரித் துறையில் இருந்து அவ்வளவு எளிதில் ஆவணங்கள் பற்றிய சான்றாதாரங்கள், விளக்கங்கள் கேட்கப்படுவது இல்லை. வருமான வரித் துறை ரேண்டமாக கணக்குகளை ஆய்வுக்கு எடுக்கும்போது மட்டுமே அதுகுறித்து விளக்கங்கள் கேட்கப்படும். அப்போதும் எல்லா வருமானங்களை பற்றிய விளக்கங்களும் கேட்கப்படாது.

பொதுவாக, எந்தக் குறிப்பிட்ட பணப்பரிமாற்றத்தின் மீது வருமான வரித் துறைக்கு சந்தேகம் வருகிறதோ, அந்தக் குறிப்பிட்ட வருமானம் அல்லது செலவு பற்றி மட்டுமே விளக்கம் கேட்கப்படும். உதாரணாமாக, மாதம் ரூ.50,000 வருமானம் உள்ள ஒருவர், திடீரென அந்த நிதியாண்டில் ரூ.5 அல்லது ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்தை வாங்கவோ, விற்கவோ செய்தால், அந்தக் குறிப்பிட்ட சொத்து பற்றி மட்டும் தான் விளக்கம் கேட்பார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால், குறிப்பிட்ட நிதியாண்டில் அதிக அளவு மதிப்பீட்டில் ஒருவருடைய 'பான் எண்' சம்மந்தப்பட்டிருந்தால், அப்போது அந்தப் பரிமாற்றம் குறித்து வருமான வரித் துறையில் இருந்து விளக்கம் கேட்கப்படும்.

இரண்டாவது, சிறுதொழில் செய்பவர்கள் தங்களின் வருமானங்களுக்கான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் ஆயுள் காப்பீட்டு முகவராக இருக்கிறார் என்றால், அதில் வரும் கமிஷன் தொகைகளின் அடிப்படையில்தான் அவர் வருமான வரி படிவம் தாக்கல் செய்வார். அதற்கான ஆதாரங்களை வைத்திருந்தால் போதும். இப்போது எல்லா பணப்பரிமாற்றங்களும் வங்கிகள் மூலமாக தான் நடைபெறுகிறது என்பதால் நாம் வங்கி கணக்குப் புத்தகத்தை ஆதாரமாக காட்டலாம். வருமான வரி தாக்கலில் காட்டியிருக்கும் அனைத்து வருமானங்களும் வங்கிக் கணக்கு புத்தகத்திலும் இருக்க வேண்டும் என்பது மட்டும் இங்கு மிகவும் முக்கியம்.

வருமான வரித் துறை எதிர்பார்ப்பது என்னவென்றால், ஒருவருக்கு, நிறுவனத்திற்கு எவ்வளவு வருமானம் வந்திருக்கிறது, என்ன என்ன வகையில் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கான கணக்கு மற்றும் பெரிய பரிமாற்றங்கள் ஏதாவது நடைபெற்றிருந்தால் அதற்கான விளக்க ஆதாரம். இந்த ஆதாரங்கள் இருந்தால் போதும், அதுவும் ஆதாரங்களின் நகல் இருந்தால் போதும், அவையும் எழுத்துபூர்வமாக கேட்டால் மட்டுமே தரவேண்டும்.”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in