புதுடெல்லி: அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது யுரேனியம் விநியோகம் உட்பட இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 27-ம் தேதி மும்பை வந்தார். முதல் இரு நாட்கள் மும்பையில் பல்வேறு தொழிலதிபர்களை அவர் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் டெல்லி சென்றார். அங்குள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, அரிய வகை கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தியா, கனடா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக இரு நாடுகள் இடையே ரூ.24,000 கோடி மதிப்பில் யுரேனியம் விநியோக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி வரும் 2027ம் ஆண்டு முதல் 2035ம் ஆண்டு வரை 11,000 டன் யுரேனியத்தை இந்தியாவுக்கு கனடா விநியோகம் செய்யும்.
அரிய வகை கனிமங்கள், எரிசக்தி தொடர்பாக இந்தியா, கனடா இடையே 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு எல்பிஜி எரிவாயுவை விநியோகம் செய்ய கனடா சம்மதம் தெரிவித்திருக்கிறது.
திருப்பதி ஐஐடி, திருப்பதியில் செயல்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கனடா பல்கலைக் கழகங்களின் கிளைகளை அமைக்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இரு நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் புதிய திட்டங்கள் தொடர்பான 9 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறும்போது, "இந்தியாவும் கனடாவும் ஜனநாயக நாடுகள். இரு நாடுகளும் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடி வருகின்றன. இரு நாடுகள் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல ஆலோசனை நடத்தினோம். வரும் 2030-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 50 பில்லியன் டாலரை எட்டும். இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது" என்றார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி கூறும்போது, "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் கொள்கையை நான் முழுமனதோடு வரவேற்கிறேன். இன்றைய சூழலில் உலகம் முழுவதும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒத்த கருத்துடைய நாடுகள் ஒருமித்து செயல்பட வேண்டும். காற்றாலை, சூரிய மின் உற்பத்தி, ஹைட்ரஜன் உள்ளிட்ட எரிசக்தி சார்ந்த திட்டங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். வரும் 2050ம் ஆண்டில் இரு நாடுகளிலும் மின் உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த நேரத்தில் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை நினைவுகூர்கிறேன். எழுந்திரு, விழித்திரு, லட்சியத்தை அடையும் வரை உழைத்திரு என்ற அவரது போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். வரும் 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல வலுவான கனடாவை உருவாக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். இரு நாடுகளின் கனவும் நிறைவேறும்" என்றார்.