வணிகம்

வீட்டுக் கடன்: திருப்பி செலுத்தும் திறனும் இஎம்ஐ தொகையும் - ஓர் எளிய புரிதல்

செய்திப்பிரிவு

கடன் தொகை: வீட்டுக் கடன் விஷயத்தில் வாடிக்கையாளர் மத்தியில் எழும் முக்கியக் கேள்வி: எவ்வளவு கடன் கிடைக்கும்? - வீட்டின் விலையைப் பொறுத்தே வங்கிகள் கடன் வழங்குகின்றன. சாதாரணமாக 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் அதற்கும் அதிகமாகவும் வங்கிகள் கடன்கள் தருகின்றன.

வாங்கியக் கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் உங்களால் திருப்பிச் செலுத்த முடியுமா, அதற்கான வருமான ஆதாரம் உங்களிடம் உள்ளதா என்பதைப் பொறுத்தே வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

திருப்பி செலுத்தும் திறனும் இஎம்ஐயும்: வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை நாம் புரிந்துகொள்ள, வாடிக்கையாளர் எவ்வளவு பணம் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை அறிய இஎம்ஐ முறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, 6.7 சதவீத வட்டி விகிதத்தில், ஒருவர் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார் என்றால், பத்து வருடத்திற்கு அவர் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகை ரூ.1,145. அதே 15 வருடத்திற்கு ரூ.882-ம், 20 வருடத்திற்கு ரூ.757-ம், 25 வருடத்திற்கு ரூ.687-ம், 30 வருடங்களுக்கு ரூ.645-ம் மாதாந்திர தவணைத்
தொகையாக அவர் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இதே ஒருவர் 6.7 சதவீத வட்டியில் ரூ.25 லட்சம் கடன் பெற்றிருந்தால் அவர் திருப்பி செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகை ரூ.18,934. திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் என்பது, கடன் வாங்கும்போது உங்களின் வயதை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

கடன் வாங்கும்போது உங்களுக்கு வயது 25 என்றால் 30 ஆண்டுகள் கூட வங்கிகள் கால அவகாசம் வழங்குகின்றன. வீட்டுக் கடன் விஷயத்தில் எவ்வளவு வட்டி கட்டுகிறோம் என்று பார்ப்பதை விட மாதம் எவ்வளவு தொகை திருப்பிச் செலுத்த முடியும் என்று பார்ப்பது அவசியம்.

வீட்டுக் கடனும் மார்ஜினும்:

வீட்டுக் கடன் வாங்கும்போது மார்ஜின் தொகை என்று ஒன்று சொல்லப்படுவதுண்டு. வீட்டின் மொத்த விலையில் வாடிக்கையாளர் பங்களிப்பாக வங்கியில் செலுத்தப்படும் தொகையே மார்ஜின். இது வீடு, வாடிக்கையாளர் வருமானம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. மார்ஜின் விஷயத்தில் ரிஸ்க் என்று ஒன்று சொல்லப்படுகிறது. வீட்டுக் கடனில் ரிஸ்க் குறைய வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

ரீபேமன்ட் ஹாலிடே:

வீட்டுக் கடனில் ரீபேமன்ட் ஹாலிடே என்ற ஒன்று உண்டு. வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது வாடிக்கையாளர் கடன் வாங்குகிறார் என்றால், அந்த வீடு கட்டி முடிக்கப்படும் வரை வாடிக்கையாளர் தவணைப் பணம் செலுத்த வேண்டியது இல்லை. வீடு கட்டி முடித்து, அதில் குடியேறிய பின்னர் தவணைத் தொகை கட்டத் தொடங்கலாம். தவணை கட்டாத அந்தக் காலத்தை ரீபேமன்ட் ஹாலிடே என்று சொல்கிறார்கள். இதற்கும் 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை என்று குறிப்பிட்ட கால அவகாசம் உண்டு.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT