

எலிவளையானாலும் தனிவளை வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். குடியிருக்க ஒரு தனி வீடு என்பது இன்று எல்லோரது சராசரி கனவுகளில் ஒன்றாகிவிட்டது. இன்று பலரின் சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன வீட்டுக் கடன்கள். வீட்டுக் கடன் என்றால் என்ன, யாருக்கெல்லாம் வீட்டுக் கடன் தரப்படுகிறது என்ற அடிப்படைகளை விவரிக்கிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான "குறள் இனிது" சோம வீரப்பன்...
வீட்டுக் கடன்: வீட்டுக் கடன் வாங்க நினைக்கும் ஒருவருக்கு முதலில் வரும் கேள்வி: ‘வங்கி எதற்கெல்லாம் வீட்டுக் கடன் தருகிறது?’ என்பதே. வீடு கட்டுவதற்கு மட்டும் வங்கிகள் கடன் வழங்குவதில்லை. மாறாக, இடம் வாங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் அதில் வீடு கட்டுவதற்கு, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதற்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. அதாவது, கட்டி முடிக்கப்பட்ட, கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கட்டப்பட இருக்கிற அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதற்கும் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் வீட்டைப் பழுது பார்ப்பதற்கும், இருக்கிற வீட்டை புதிதாக எடுத்துக் கட்டுவதற்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்துமே வீட்டுக் கடன்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
பிற கடன்களிலிருந்து மாறுபட்டது வீட்டுக் கடன்: வீட்டுக்கடன் என்பது மற்றக் கடன்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது. இந்திய அரசாங்கம், மத்திய ரிசர்வ் வங்கி, வர்த்தக வங்கிகள் மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வீட்டுக்கடன் வழங்குகின்றன. இதனால் வீட்டுக் கடனின் வட்டி விகிதம் குறைவு. வாகனக் கடனுக்கான வட்டி, வீட்டுக் கடன் வட்டியை விட இரண்டு, மூன்று சதவீதம் அதிகமாக இருக்கும், வியாபாரக் கடன் என்று பார்த்தால் 9, 10, 11 சதவீதம் இருக்கும், ஆனால் வீட்டுக்
கடன் வட்டி விகிதம் 7 சதவீதம், அதற்கும் குறைவாகவே இருக்கும்.
அதேபோல வீட்டுக் கடனின் திருப்பிச் செலுத்தும் காலமும் மற்ற கடன்களை விட அதிகம். வாகனக் கடன்களின் திருப்பிச் செலுத்தும் காலம், 3 முதல் 5 வருடங்களுக்குள். வீட்டுக் கடனுக்கான திருப்பிச் செலுத்தும் காலம் என்பது 10 முதல் 25 வருடங்கள் வரை இருக்கும். வீட்டுக் கடனுக்கான வட்டியும் குறைவு; திருப்பிச் செலுத்துவதும் எளிது.
கடன் தொகை: வீட்டுக் கடன் விஷயத்தில் வாடிக்கையாளர் மத்தியில் எழும் இரண்டாவது கேள்வி: எவ்வளவு கடன் கிடைக்கும்? - வீட்டின் விலையைப் பொறுத்தே வங்கிகள் கடன் வழங்குகின்றன. சாதாரணமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் அதற்கும் அதிகமாகவும் வங்கிகள் கடன்கள் தருகின்றன.வாங்கியக் கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் உங்களால் திருப்பிச் செலுத்த முடியுமா, அதற்கான வருமான ஆதாரம் உங்களிடம் உள்ளதா என்பதைப் பொறுத்தே வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
திருப்பி செலுத்தும் திறனும் இஎம்ஐயும்: வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை நாம் புரிந்து கொள்ள, வாடிக்கையாளர் எவ்வளவு பணம் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை அறிய இஎம்ஐ முறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தில், ஒருவர் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார் என்றால், பத்து வருடத்திற்கு அவர் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகை ரூ.1,145. அதே 15 வருடத்திற்கு ரூ.882-ம், 20 வருடத்திற்கு ரூ.757-ம், 25 வருடத்திற்கு ரூ.687-ம், 30 வருடங்களுக்கு ரூ.645-ம் மாதாந்திர தவணைத்
தொகையாக அவர் திருப்பிச் செலுத்த வேண்டும். இதே ஒருவர் 6.7 சதவீத வட்டியில் ரூ.25 லட்சம் கடன் பெற்றிருந்தால் அவர் திருப்பி செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகை ரூ.18,934. திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் என்பது, கடன் வாங்கும்போது உங்களின் வயதை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடன் வாங்கும்போது உங்களுக்கு வயது 25 என்றால் 30 ஆண்டுகள் கூட வங்கிகள் கால அவகாசம் வழங்குகின்றன. வீட்டுக் கடன் விஷயத்தில் எவ்வளவு வட்டி கட்டுகிறோம் என்று பார்ப்பதை விட மாதம் எவ்வளவு தொகை திருப்பிச் செலுத்த முடியும் என்று பார்ப்பது அவசியம்.
வீட்டுக் கடனும் மார்ஜினும்: வீட்டுக் கடன் வாங்கும்போது மார்ஜின் தொகை என்று ஒன்று சொல்லப்படுவதுண்டு. வீட்டின் மொத்த விலையில் வாடிக்கையாளர் பங்களிப்பாக வங்கியில் செலுத்தப்படும் தொகையே மார்ஜின். இது வீடு, வாடிக்கையாளர் வருமானம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. மார்ஜின் விஷயத்தில் ரிஸ்க் என்று ஒன்று சொல்லப்படுகிறது. வீட்டுக் கடனில் ரிஸ்க் குறைய வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
ரீபேமன்ட் ஹாலிடே: வீட்டுக் கடனில் ரீபேமன்ட் ஹாலிடே என்ற ஒன்று உண்டு. வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது வாடிக்கையாளர் கடன் வாங்குகிறார் என்றால், அந்த வீடு கட்டி முடிக்கப்படும் வரை வாடிக்கையாளர் தவணைப் பணம் செலுத்த வேண்டியது இல்லை. வீடு கட்டி முடித்து, அதில் குடியேறிய பின்னர் தவணைத் தொகை கட்டத் தொடங்கலாம். தவணை கட்டாத அந்தக் காலத்தை ரீபேமன்ட் ஹாலிடே என்று சொல்கிறார்கள். இதற்கும் 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை என்று குறிப்பிட்ட கால அவகாசம் உண்டு.
இறுதியாக, வீட்டுக் கடன் வாங்கும் போது உங்களால் எவ்வளவு தொகை செலுத்த முடியும் என்பதற்கான சான்றாதாரங்களை வங்கிகள் கேட்கும். அதேபோல மார்ஜின் தொகையை வங்கியில் கணக்கு தொடங்கி, அதில் செலுத்தச் சொல்வார்கள். வாடிக்கையாளர்களுடைய சம்பள விபரம், ஃபார்ம்-16 போன்றவையும் வங்கியில் தரவேண்டும். உங்கள் வருமானத்தில் குடும்பச் செலவுகள் போக, கடன் தொகைய திருப்பிச் செலுத்த முடியுமா என்று வங்கி அறிந்து கொள்வதற்கான வாடிக்கையான வழிமுறை இது. வங்கியின் இந்த விசாரணையின்போது உண்மையைச் சொல்லி வெளிப்படையாக இருங்கள். அது வங்கிக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது. ஏனென்றால் நல்ல வங்கியை வாடிக்கையாளர்கள் தேடுவது போல, நல்ல வாடிக்கையாளர்களை வங்கிகளும் தேடுகின்றன.”