புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ள நிலையில், அவற்றுக்கான நிலுவைத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்துவதில் பலரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இத்தகைய பயனர்களுக்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கி விதிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கூடுதல் அவகாசம் மற்றும் குறைந்த கட்டணம் ஆகிய சலுகைகள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பிறகு, அபராதக் கட்டணம் உடனடியாக விதிக்கப்படாது. கிரெடிட் கார்டுக்கான பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு பில்லில் குறிப்பிடப்பட்ட தேதியைக் காட்டிலும் கூடுதலாக மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
உதாரணமாக, ஒருவரது நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய கடைசித் தேதி மே 5 என்றால், அவர் எவ்வித அபராதமும் இன்றி மே 8-ம் தேதி வரை கிரெடிட் கார்டு பில்லை செலுத்தலாம். மற்றொரு முக்கிய மாற்றமாக, தாமதக் கட்டணம் இனி முழுத் தொகைக்கும் விதிக்கப்படாது. மாறாக, செலுத்தப்பட வேண்டிய மீதமுள்ள நிலுவைத் தொகைக்கு மட்டுமே அது கணக்கிடப்படும்.
மூன்று நாள் காலக்கெடுவுக்குப் பிறகும் பணம் செலுத்தத் தவறினால், அது நிலுவையாகக் கருதப்பட்டு ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த விதி முறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.