சென்னை: ‘மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்’ என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அதில், எரிசக்தி துறையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
> தமிழ்நாட்டிற்கு 2640 மெகா கூடுதல் மின் உற்பத்தி திறனை வழங்கும் உடன்குடி நிலை-1 மற்றும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படும்.
> 550 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளிமலை நீரேற்று புனல் மின் திட்டத்தின் செயல்பாடு விரைவுபடுத்தப்படும்.
> புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்கப்படுத்த பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்துடன் இணைந்து ‘புதிய வீட்டுக்கூறை சூரிய மின் மானிய திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
> சென்னை மாநகரில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும், மாநிலத்தின் பிறப்பகுதியில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
> கோயம்புத்தூர் - அரியலூர் 765 கேவி மின் பகிர்மான பாதை திட்டம் 4000 கோடி ரூபாய் செலவில் அரசு தனியார் கூட்டமை முறையில் செயல்படுத்தப்படும்.
> தமிழ்நாட்டின் தென் மண்டலத்திலிருந்து பசுமை எரிசக்தியை கொண்டு செல்லும் பசுமை எரி சக்தி வழித்தடத்தின் இரண்டாம் கட்டம் 1187 கோடி ரூபாய் மதிப்பிலும், 1640 கோடி ரூபாய் மதிப்பிலான விருதுநகர் - கோயம்புத்தூர் 765 கே.வி மின் பகிர்மான திட்டங்களின் செயல்பாடு விரைவு படுத்தப்படும்.
> மின்விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் 1,543 கோடி ரூபாய் முதலீட்டில் 128 புதிய துணை மின் நிலையங்களை அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும்.
> 2000 கோடி ரூபாய் செலவில் 4000 பழைய விநியோக மின்மாற்றிகள் படிப்படியாக மாற்றப்படும்.
> மின்சார வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் பொது சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்களின் மூலம் குடியிருப்புகளில் அமைக்கப்படும் மின்வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம் வழங்கும். இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.• இந்த பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு 15,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
> சென்னை பெருநகரப் பகுதியில் விரைவான விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு 5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவு படுத்தப்பட்ட சென்னை பெருநகரப் பதிவுக்கான ஒரு விரிவான முழுமை திட்டத்தை அரசு தயாரிக்கும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> மனைகள் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி வழங்க பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய இணைய வழி திட்ட அனுமதி தளம் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த இவ்வாண்டில் 14,194 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கப்படும். இதற்காக 1283 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
> சென்னை பெருநகரப் பகுதியில் மாநகர இளைஞர் மற்றும் குடும்ப வீட்டு வசதி திட்டம் என்ற முன்னோடி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஏழு ஆண்டுகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.
> வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு இந்த பட்ஜெட்டில் 8852 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.