வணிகம்

உக்கடம் பெரியகுளத்தில் 154 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்

இல.ராஜகோபால்

கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், உக்கடம் பெரியகுளத்தின் தென்கரை பகுதியில் 154 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் பெரியகுளத்தின் தென்கரை பகுதியில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 154 கிலோ வாட் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் தொடங்கி வைத்தார். மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை எம்.பி கணபதி ராஜ்குமா் கூறும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட உக்கடம், பெரியகுளத்தின் தென்கரை பகுதியில் சுமார் 13.7 சென்ட் நீர் பரப்பளவில் 280 எண்ணிக்கையிலான சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவி கேமரா, இடிதாங்கி, மின்சார விளக்குகள், தீயணைக்கும் கருவி, காலநிலை அளவீடு, பாதுகாப்பு கம்பி வேலிகள் மற்றும் தானியங்கி மின் தகடு சுத்தம் செய்யும் நீர் தெளிப்பான் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

துணை மேயர் வெற்றிசெல்வன், தமிழ்நாடு மின்வாரிய தலைமைப் பொறியாளர் சுரேஷ்குமார், மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT