சென்னை: ‘2036-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதே நமது அரசின் குறிக்கோள் ஆகும்’ என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அதில் வெளியான தொழில் வளர்ச்சித் துறையின் முக்கிய அறிவிப்புகள்:
> 2036-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதே நமது அரசின் குறிக்கோள் ஆகும்.
> நமது அரசு பொறுப்பேற்றவுடன் 14,790 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ரூ.35,062 கோடி மதிப்பிலான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இடப்பட்டுள்ளன.
> தமிழ்நாட்டில் புதிய துறைமுகங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை இந்த அரசு ஆராயும்.
> தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தன் நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும்.
> முதலீட்டாளர்கள் உள்ளூர் சூழலை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் வகையில் விரிவான டிஜிட்டல் தளமாக தமிழ்நாடு தொழில் திறன் விவரப்பட்டியலை அரசு உருவாக்கும்.
> தமிழ்நாட்டின் போட்டித் திறனை மேலும் செம்மைப்படுத்த ‘வழிகாட்டி 3.0’ எனும் புதிய முதலீட்டு சேவை அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். இதன் முக்கிய அங்கமாக ‘தமிழ்நாடு ஒற்றை சாளர இணையதளம் 3.0’ செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் தொடங்குவதற்கும், முதலீட்டு திட்டங்களுக்கும் தேவையான அரசு அனுமதிகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஒருங்கிணைத்து ஒரே இடத்திலேயே பெறலாம்.
> தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாடு வாழ் தமிழர் முதலீட்டு சேவை பிரிவு அமைக்கப்படும்.
> புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் சுமார் 3200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த ஐந்தாண்டுகளில் உருவாக்கப்படும்.
> தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும்.
> செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமாக ‘அறிவகம்’ உருவாக்கப்படும். இதில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்டவை இடம்பெறும் இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
> தொழில், முதலீட்டு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4,414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் வெளியான அறிவிப்புகள்:
> பதிவு செய்யப்பட்ட 43.47 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் தேசிய அளவில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
> இந்த நிதியாண்டில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 225 கோடி ரூபாயும், மூலதன மானியங்கள் திட்டத்தின் கீழ் 352 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> பசுமை எஃகு உற்பத்தி முன் முயற்சி திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான இந்த நிதி ஆண்டில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 2,142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.