காஞ்சிபுரத்தில் இயங்கும் தமிழ்நாடு ஜரிகை ஆலை பொலிவுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஜன.22-ம்தேதியிட்ட இதழில் பொலிவை இழக்கும் ஜரிகை உற்பத்தி: ஆலையை மீட்க என்ன வழி? என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அளித்துள்ள விளக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஜரிகை லிமிடெட் காஞ்சிபுரத்தில் 1974-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் ஜரிகை மார்க் (242 கிராம்) விலை தற்போது ரூ.23,075-க்கு விற்கப்படுகிறது. இதன் விலை நாள் தோறும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்படும் மாற்றத்துக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
பத்திரிகை செய்தியில் இடம்பெற்றுள்ள ‘வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ப இந்த ஆலை மேம்படுத்தப்படவில்லை’ என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. ஜரிகை ஆலையில் மொத்தம் 6 தங்க முலாம் பூசும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆலையின் உற்பத்தி திறனை பெருக்க, இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய 3 நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் தங்கம் விலை 38.24 சதவீதம், வெள்ளி விலை 34.28 சதவீதம் உயர்ந்துள்ளது. அதனால் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஜரிகை கொள்முதல் குறைந்துள்ளது. ஜரிகை விலை உயர்வால், நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பட்டு சேலை விலை உயர்ந்து, அதன் மூலம் பட்டு சேலை விற்பனை நாளடைவில் குறைந்து வருகிறது. ஆலையில் ஆரம்ப காலம் முதல் தங்கமுலாம் பூச்சு பிரிவில், தேவையான ரசாயனங்கள் சூரத் விற்பனையாளர்களிடமிருந்து பெறப்பட்டது.
இத்தொழில்நுட்பத்துக்கு சூரத் விற்பனையாளர்களையே முழுவதுமாக சார்ந்திருப்பதை தவிர்க்க அண்ணா பல்கலைக்கழக டெக்ஸ்டைல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் தங்க முலாம் பூச்சு பிரிவுக்கு தேவையான ரசாயனங்கள் ஆலையிலேயே தயாரித்து தன்னிறைவு பெற்றுள்ளது. பட்டு நூலுக்கு 15 சதவீதம் அரசு மானியம் வழங்குவது போல், ஜரிகை மார்க்கொள்முதல் செய்யும்போது, தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15 சதவீத மானியம் வழங்க, மத்திய அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசால் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2023-ம் ஆண்டு நவ.24 முதல் ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே ஆண்டு டிச.28-ம் தேதி ரூ.1.41 கோடியில் புனரமைக்கப்பட்ட ஆலை திறக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசு முன்னெடுத்து செயல்படுத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் தமிழ்நாடு ஜரிகை ஆலை, பொலிவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.