மும்பை: வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை மூலம் எந்த வாடிக்கையாளரும், எந்த கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இந்த தடை உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ முறையில் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அதன் இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35ஏ-வின் கீழ் இந்த நடவடிக்கையை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர் கணக்கு, வாலட் அல்லது FASTag போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப் போன்ற கிரெடிட் சேவை சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.
இருந்தாலும் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கு, நடப்புக் கணக்கு, ப்ரீபெய்ட் வாலட், FASTag போன்றவற்றில் உள்ள இருப்புத் தொகையை பெறவும் அல்லது பயன்படுத்தவும் முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகையை (பேலன்ஸ்) முழுவதும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.