மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் யுபிஐ பரிவர்த்தனை உச்ச வரம்பு ரூ.5 லட்சம்: புதிய விதிமுறை அமலுக்கு வந்தது

மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் யுபிஐ பரிவர்த்தனை உச்ச வரம்பு ரூ.5 லட்சம்: புதிய விதிமுறை அமலுக்கு வந்தது
Updated on
1 min read

புதுடெல்லி: யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஸ்மார்ட்போன் மூலம் உடனடிபணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மிகப்பெரிய பங்காற்றுகிறது. நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி இதுவாகும். யுபிஐ பேமண்ட்களின் வரம்பை அதிகரிக்க புதிய விதிமுறைகளையும், மாற்றங்களையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவை, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற பேமண்ட் செயலிகள் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்துக்கும் மேலாகசெயல்படுத்தப்படாமல் இருக்கும்யுபிஐ ஐடிகளை செயலிழக்க செய்யுமாறு இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) கேட்டுக் கொண்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான தினசரி உச்சவரம்பு தற்போது வரை ரூ.1லட்சமாக உள்ளது. இருப்பினும், யுபிஐ பேமண்ட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை உச்சவரம்பு மட்டும்ரூ.5 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகளை (பிபிஐ) பயன்படுத்தி செய்யப்படும் ரூ.2,000-க்கும் மேல் உள்ளசில வணிகர்களின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீத பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதிகரித்து வரும் ஆன்லைன் பேமண்ட் மோசடி சம்பவங்களை தடுக்க, ரூ.2,000-க்கும் அதிகமாக செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு நான்கு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே வசதியும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுதவிர, ரிசர்வ் வங்கியானது ஜப்பானின் ஹிட்டாச்சியுடன் இணைந்து தற்போது நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்களை திறக்கஉள்ளது. அதில், உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து கியூஆர் குறியீடைஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தை எடுக்கலாம்.

2023 ஆகஸ்டில் யுபிஐ பரிவர்த்தனை 10 பில்லியன் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்தது. ஒரு மாதத்துக்கு 100 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக என்பிசிஐ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in