புதுடெல்லி: இந்திய அரசின் கடன் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மதிப்பீடு உண்மை நிலை அல்ல, அனுமானம்தான் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இந்திய அரசின் கடன் சுமை குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, 2027-க்குள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 100% அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி தேவைப்படும் என்பதால், நீண்டகால கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்த சர்வதேச நாணய நிதியத்தின் அந்த அறிக்கையில், மத்திய நிதி அமைச்சகம் புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் எனவும், தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்த மதிப்பீட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுகள் அனுமானங்களே. அவை உண்மை நிலையை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. இந்திய அரசின் கடன், உள்நாட்டு உற்பத்தியை விட 100% அதிகமாக இருக்கும் என்று கூறும் ஐஎம்எஃப் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விளக்கம் தவறானது. பொது அரசாங்கக் கடனில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடனும் அடங்கும். 2020-21ல் சுமார் 88% ஆக இருந்த கடன், அதுவே 2022-23ல் சுமார் 81% ஆக குறைந்துள்ளது. கடன் அளவுகளை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்கள் தனித்தனியாக தங்கள் நிதி பொறுப்புச் சட்டத்தையும் இயற்றியுள்ளன. மேலும், அவை அந்தந்த மாநில சட்டமன்றங்களால் கண்காணிக்கப்படுகிறது. எனவே, பொது அரசாங்க கடன் நீண்ட காலத்துக்கு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஎம்எஃப் மதிப்பீடானது ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் கோவிட்-19 போன்ற ஓர் அசாதாரண சூழ்நிலையின்போது நடக்கலாம். இந்த நூற்றாண்டில் இந்தியா சந்தித்த அசாதாரண சூழ்நிலைகள் உலகளவில் நடந்தவையுடன் தொடர்புடையவை.
எடுத்துக்கட்டாக, உலகளாவிய நிதி நெருக்கடி, கோவிட்-19, ரஷ்யா-உக்ரைன் போர் போன்றவை. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகள் உலகப் பொருளாதாரத்தை ஒரே மாதிரியாக பாதித்தன. எனினும் சில நாடுகள் அசாதாரண சூழ்நிலையிலும் பாதிக்கப்படாமல் இருந்தன. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனாவுக்கான கடன் அளவானது அவற்றின் ஜிடிபியில் முறையே 160, 140 மற்றும் 200 சதவீதமாக உள்ளது. அதுவே இந்தியாவோடு ஒப்பிடுகையில் மிக மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது" என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.