

சென்னை: நமது திறமையின் காரணமாகவே இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தம் மேற்கொள்ள இதர நாடுகள் இந்தியாவை வலியுறுத்துவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியத் தொழில் கூட்டமைப்பின் இளைஞர் பிரிவான யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் `டேக் பிரைடு 2023 உச்சி மாநாடு' சென்னையில் டிச.21,22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது: நமது நாட்டின் திறமை, தொழில்நுட்பம், பாரம்பரியம் ஆகிய மூன்றையும் தான் பிற நாடுகள் உற்று நோக்குகின்றன. ஏனெனில், பிற நாடுகள் வளர்ச்சிக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 7.67 சதவீத பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டியுள்ளது. நம்மிடம் உள்ள திறமையின் காரணமாகவே பிற நாடுகளின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நம் திறமையைப் பயன்படுத்தும் வகையிலேயே இரு நாடுகளுக்கு இடையே கல்வி, பணி போன்றவற்றுக்காக எளிதில் பயணிக்கும் வகையில் மொபிலிட்டி மற்றும் இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு பிற நாடுகள் வலியுறுத்துகின்றன. இரட்டை குடியுரிமை வழங்குவதில் பல்வேறுசிக்கல்கள் உள்ளன. எனினும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது சிக்கலான ஒன்று தான். ஆனால் சொல்ல வேண்டியவற்றை நாங்கள் உரக்கச் சொல்லிவிட்டோம். இந்தியா மீதான உலகத்தின் மரியாதை உயர்ந்து கொண்டே வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், ``அனைவரையும் உள்ளடக்கி தமிழகம் வளர்ந்துவருகிறது. குறிப்பாகத் திறமையின்தலைநகராகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. தொழில் துறையின் தேவைக்கேற்ப திறமைகளை நாம்உருவாக்கியுள்ளோம். பிற மாநிலங்களுடன் போட்டிப்போடுவதை விட நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதே முக்கியம் என முதல்வர் ஸ்டாலின் சொல்வார். அதையே செய்து வருகிறோம்.தென் தமிழகத்துக்கும் வளர்ச்சிசென்றடையும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார். நிகழ்வில், இளைய தலைமுறை சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கான பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.