அடுத்த விமானம் எப்போது என தெரியாமல், பெங்களூரு விமான நிலையத்தின் இண்டிகோ கவுன்ட்டரில் லக்கேஜை வரிசையில் வைத்துவிட்டு காத்திருக்கும் பயணிகள். படம்: பிடிஐ

 
வணிகம்

நாடு முழுவதும் 1000 இண்டிகோ விமான சேவை ரத்து: பயணிகள் தவிப்பு, போராட்டம் - முழு விவரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​வி​மானிகள் பற்​றாக்​குறை காரணமாக இண்​டிகோ நிறுவனத்தின் 1,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணி​கள் தவித்து வரு​கின்​றனர்.

நாட்​டின் மிகப்​பெரிய விமான நிறு​வன​மான இண்​டிகோ, தின​மும் நாடு முழு​வதும் 2,200 விமானங்​களை இயக்கி வரு​கிறது. இந்த நிலையில், விமானிகளின் பணி நேர வரம்பு (எப்​டிடிஎல்) குறித்து கடந்த மாதம் திருத்​தப்​பட்ட விதி​முறை​கள் அறிவிக்​கப்​பட்​டன. இதன்​படி, விமானிகளுக்கு பணிநேரம், ஓய்​வுநேரம் நிர்​ண​யிப்​பது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ள​தால், விமானிகளுக்கு பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ளது.

இது மட்​டுமின்​றி, இண்​டிகோ விமான இயக்​கத்​தில் தொழில்​நுட்​பக் கோளாறுகள், பயண அட்​ட​வணை மாற்​றங்​கள், மோச​மான வானிலை, விமானப் போக்​கு​வரத்​தில் அதி​கரித்த நெரிசல் போன்​றவற்​றால் கடும் நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ள​தாக இண்​டிகோ தலைமை செயல் அதி​காரி பீட்​டர் எல்​பர்ஸ் கூறி​யிருந்​தார்.

இதன் காரணமாக, டெல்​லியில் 220, ஹைத​ரா​பாத்​தில் 90, பெங்​களூரு​வில் 100 உட்பட நாடு முழு​வதும் நேற்று 4-வது நாளாக 1,000-க்​கும் மேற்​பட்ட இண்​டிகோ விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால், பயணி​கள் தவித்து வரு​கின்​றனர். சென்னை உள்​ளிட்ட அனைத்து முக்​கிய விமான நிலை​யங்​களி​லும் இண்​டிகோ நிறுவன கவுன்ட்​டர்​கள் முன்பு ஏராள​மான பயணி​கள் குவிந்​து, ஊழியர்​களு​டன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர்.

சோர்​வடைந்த பயணி​கள் விமான நிலை​யத்​தில் ஆங்​காங்கே தரை​யில் படுத்​துக் கிடக்​கின்​றனர். இதனால் டெல்​லி, மும்​பை, சென்​னை, ஹைத​ரா​பாத், பெங்​களூரு உள்​ளிட்ட விமான நிலை​யங்​களில் கூச்​சல், குழப்​பம் நில​வு​கிறது. இதுதொடர்​பான வீடியோக்​கள் வைரலாகி வரு​கின்​றன.

அதே​நேரம், ஏர் இந்​தி​யா, ஸ்பைஸ் ஜெட் நிறு​வனங்​களின் விமானங்​கள் தொடர்ந்து இயங்கி வரு​வ​தால், அந்த விமானங்​களில் டிக்​கெட் கட்​ட​ணம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்​துள்​ளது. அவசர வேலை​யாகச் செல்​பவர்​கள் அதிக கட்​ட​ணம் கொடுத்து வேறு நிறு​வனங்​களின் விமானத்​தில் பயணம் மேற்​கொள்ள டிக்​கெட் வாங்​கிச் செல்​கின்​றனர்.

டெல்லி - மும்​பைக்கு ஞாயிற்​றுக்​கிழமை பயணிக்க எகானமி டிக்​கெட் விலை ரூ.21 ஆயிரத்​தில் இருந்து ரூ.39 ஆயிரம் வரை உள்​ளது. பெங்களூரு - கொல்கத்தா டிக்கெட் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்​னை​யில் இருந்து டெல்​லிக்கு ரூ.21 ஆயிரம் வசூலிக்​கப்​படு​கிறது.

சென்​னை​யில் போராட்​டம்: சென்​னை​யில் இருந்து கோவை செல்ல வழக்​க​மாக ரூ.10 ஆயிரம் வரை மட்​டுமே வசூலிக்​கப்​படும் நிலை​யில், தற்​போது ஏர் இந்​தியா விமானத்​தில் ரூ.55 ஆயிரத்​தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

சென்னை - திருச்சி இடையே இன்று நேரடி விமானம் இல்லை என்று கூறி, மும்​பை, பெங்​களூரு வழி​யாக 36 மணி நேரம் பயணம் செய்​து, திருச்சி செல்ல ரூ.40,800 கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் இருந்து மதுரை, தூத்​துக்​குடி, சேலத்​துக்கு நேற்று விமானம் இல்​லை. பல விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​ட​தால், பாதிக்​கப்​பட்ட ஏராள​மான பயணி​கள், சென்னை விமான நிலை​யத்​தில் கோஷமிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இந்த பிரச்​சினை​களுக்கு டிச.10-ம் தேதிக்​குள் தீர்வு காணப்​படும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இண்டிகோ தெரி​வித்​துள்​ளது. அந்த நிறு வனத்தின் கோரிக்கையை ஏற்​று, புதி​தாக அமல்​படுத்​திய விமானிகள் பணி நேர விதி​முறை​கள் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளதாக விமானப் போக்​கு​வரத்து துறை அமைச்​சர் ராம் மோகன் நாயுடு நேற்று தெரிவித்தார்.

‘‘பயணி​களின் பாது​காப்​பு,விமானப் பாது​காப்பை கருத்தில் கொண்​டு, விமானிகளுக்​கான பணிநேர வரை​முறை விதி​கள் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​படு​கின்​றன. இதன்​மூலம் 8-ம் தேதிக்​குள் இண்​டிகோ வி​மான சேவை இயல்புநிலைக்கு திரும்​பும் என எதிர்​பார்க்​கிறோம்’’ என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT