சென்னை: தெற்கு ரயில்வேயில் 5,068 கி.மீ. தொலைவிலான ஒட்டுமொத்த அகலப்பாதையும் தற்போது மின்மயமாக்கப்பட்டு புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய ரயில்களை இயக்கவும், ரயில் பாதைகளை மேம்படுத்தவும், ரயில் நிலையங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அகல ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் பாரம்பரிய டீசல் இன்ஜின்களுக்குப் பதிலாக அதிவேக மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்களை இயக்க முடியும். நாடு முழுவதும் ஒட்டுமொத்த அகல ரயில்பாதை வலையமைப்பையும் 100 சதவீதம் மின்மயமாக்கும் இலக்கை நோக்கி இந்திய ரயில்வே மிக வேகமாக முன்னேறி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 99.6 சதவீதத்துக்கும் அதிகமான பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில், கடந்த ஆண்டு நிலவரப்படி, மொத்த வலையமைப்பில் 98.7 சதவீதம் மின்மயமாக்கல் எட்டப்பட்டிருந்தது.
பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே 71 கி.மீ. தொலைவு ரயில்பாதை மட்டுமே எஞ்சியிருந்தது. இந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் தலைமையிலான உயரதிகாரிகள் நேற்று முன்தினம் இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்கி ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் ஆய்வுப் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் அகல ரயில்பாதைகளை மின்மயமாக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் வரலாற்று மைல் கல்லை தெற்கு ரயில்வே எட்டியுள்ளது.
தற்போது, ஒட்டுமொத்த 5,068 கி.மீ தூரமும் முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ளதால், இனி எஞ்சின் மாற்ற வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் மண்டலம் முழுவதும் தடையற்ற மின்சார ரயில் சேவைகளை வழங்க முடியும். ரயில்களை விரைவாக இயக்க முடிவதுடன், செயல்பாட்டுத் திறன் மற்றும் இன்ஜின்களின் பயன்பாடு கணிசமாக மேம்படும் என அவர்கள் கூறினர்.
மின்சார ரயில் இயக்க வரலாறு
தெற்கு ரயில்வேயில் மின்சார ரயில் இயக்கம் என்பது கடந்த 1931-ம் ஆண்டு மே 11-ம் தேதி மெட்ராஸில் (சென்னை) தொடங்கியது. இதன் மூலம் பம்பாய்க்கு அடுத்து மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் 2-வது பெருநகரமாக சென்னை திகழ்ந்தது.
இதைத் தொடர்ந்து, 1968-ம் ஆண்டு சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மின்மயமாக்கல் தொடங்கப்பட்டது. இந்த நீண்ட நெடிய பயணத்தின் இறுதிக்கட்டமாக தற்போது 100 சதவீதம் மின்மயமாக்கல் சாதனை படைக்கப்பட்டுள்ளது.