கோவை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில், மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும், அர்ப்பணிப்போடும் செய்துவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை மண்டலத்தை தொடர்ந்து, கோவை சிரியன் சர்ச் சாலையில் அமைந்துள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில், 5-ம் ஆண்டு ‘டெட்டால்
பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - மருத்துவ நட்சத்திரம் 2025’ விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு (ஐஎம்ஏ), ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்திய விழாவில், பங்குதாரர்களாக கிராமாலயா தொண்டு நிறுவனம், லலிதாம்பிகை ஃபெர்டிலிட்டி சென்டர் ஆகியவை பங்கேற்றன.
விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கோவை, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 47 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்‘ விருது வழங்கி கவுரவித்தார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு, ரெக்கிட் (இந்தியா) நிறுவனத்தை சேர்ந்த பொதுசுகாதாரம், ஒன்ஹெல்த் பணிகள் நிறுவன தகவல் தொடர்பு மற்றும் வெளிவிவகாரங்கள் துறை முன்னணி அதிகாரி டாக்டர் கிறிஸ் மெரின் வர்கீஸ், ‘இந்து தமிழ் திசை’ விளம்பரப்பிரிவு கோவை மண்டல துணை பொது மேலாளர் ராகவ சிம்மன் ஆகியோர் நினைவு பரிசினை வழங்கினர்.
தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பி.செங்குட்டுவன், செயலாளர் எஸ்.கார்த்திக்பிரபு, நிதி செயலாளர் கவுரிசங்கர், கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் அலுவலர் இளங்கோவன் ஆகியோருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. டாக்டர் கிறிஸ் மெரின் வர்கீஸ் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பள்ளிகளில் சுகாதார முன்னெடுப்புகளை எங்கள் நிறுவனம் செய்து வருகிறது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து 5-ம் ஆண்டாக சிறப்பாக இந்த விருதுகளை மருத்துவர்களுக்கு வழங்கி வருகிறோம். அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவ சேவையாற்றும் மருத்துவர்களை பாராட்டி கவுரவிப்பது நமது அனைவரின் கடமை.
குழந்தைகள் மனதில் சுகாதார கருத்துக்களை விதைக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து, வாரந்தோறும் சுகாதார விழிப்புணர்வு பக்கங்களை வெளியிட்டு வருவது, சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என நம்புகிறோம்,’’ என்றார் விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: விருதுகள் மனிதர்களை உற்சாகப்படுத்துவதற்கும், வெளியுலகில் அவர்களை அறிமுகப்படுத்துவதற்கும் ஊக்கமாக இருக்கும். அந்த வகையில் இந்த முன்னெடுப்பை செய்து வரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
மனித உயிர்களை காப்பாற்றும் மகத்தான பணியை செய்யும் மருத்துவர்களை பாராட்டும் இந்த பணி சிறப்பானது. நிகழ்வில் விருதுகளை பெற்ற அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துகள். கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வரும் முன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீடு திட்டங்களை அன்றைக்கே விழிப்புணர்வுடன் கொண்டு வந்தார்.
விருது பெற்ற மருத்துவர்கள்.
அதன்பின், மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற போது, கரோனா காலகட்டத்தை எளிதாக கையாண்டார். நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேர் அன்றைக்கு பாதிக்கப்பட்ட சூழலில், மருத்துவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து, மக்களை காப்பாற்றினார்கள். அந்த காலகட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் அதிக ஆக்சிஜன் தேவைப்பட்டது. அன்றைய இக்கட்டான சூழலில் இருந்த தமிழக மக்களை மீட்டெடுத்தவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் இரண்டரை கோடி பேர் பயன்பெறுகிறார்கள். இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் திட்டங்கள் மூலம் ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர். ஊக்கம் தரும் இந்த விருதுகளை பெற்ற மருத்துவர்கள், இன்னும் அர்ப்பணிப்போடு மருத்துவ பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பி.செங்குட்டுவன் பேசியதாவது:‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முலம் வழங்கப்
படும் மருத்துவ நட்சத்திரம் விருது அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய விருதுகளில் ஒன்று. அந்த வகையில் இன்றைக்கு விருது பெற்ற அனைத்து மருத்துவர்களுக்கும் எனது பாராட்டுகள். தமிழகத்தில் தொடர்ந்து மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, இவ்விருதுகளை வழங்குவது போற்றக்கூடியது, என்றார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு பேசும்போது, ‘‘102 ஆண்டுகள் பாரம்பரியம் நிறைந்த இந்த இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடக்கும் 5-ம் ஆண்டு மருத்துவ நட்சத்திர விருது விழா இது. தரமான செய்திகளை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மூலம் வழங்கப்படும் இந்த விருது, உள்ளபடியே மருத்துவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்,’’ என்றார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் நிதி செயலர் கவுரிசங்கர் பேசும்போது, ‘‘மருத்துவர்களையும், ஆசிரியர்களையும் மதிக்கும் சமூகம் சிறந்த சமூகமாக இருக்கும். அதற்காக இந்த முன்னெடுப்பை நாம் பாராட்டுவோம். மருத்துவர்கள் அனைவரும் நட்சத்திரங்கள் தான்,’’ என்றார்.
விழாவில் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் டாக்டர் கோசல்ராம், செயலாளர் பரமேஸ்வரன், இந்து தமிழ் திசை விளம்பர பிரிவு பொது மேலாளர் வி.சிவக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய சபர்பன் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, புத்தகங்களை அமைச்சர் பரிசாக வழங்கினார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் விழாவை தொகுத்து வழங்கினார்.