

அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்ரிக்கர்களை ‘அருவருப்பானவர்கள்’ என்று பேசியது சர்ச்சையானது. அவர் இப்படிப் பேசுவது முதல் முறையல்ல. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான பரப்புரையிலேயே ஆரம்பித்துவிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு அவர் இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து ஆப்ரிக்கர்களுக்கு எதிரான உத்தரவுகளைப் பிறப்பித்தல், அவை செயல்படுத்தப்படுவதைக் கண்காணித்தல், செயல்படுத்தாத இடங்களில் நிதியை நிறுத்துதல் எனத் தீவிரம் காட்டி வருகிறார்.
இன்னொரு புறம், சமூக நல்லிணக்கத்துக்குத் தீங்கு பயப்பதாக ஆப்ரிக்கா தொடர்பான எதிர்மறைச் செய்திகளும் உலா வருகின்றன. ஆப்ரிக்கர்களுக்கு / ஆப்ரிக்காவுக்கு ஏன் இப்படி ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது?
ஆப்ரிக்க நத்தையும் கெளுத்தி மீனும்: கடந்த நவம்பரில், ‘ஆப்ரிக்க நத்தை ஆபத்தானது, ஐந்நூறுக்கும் மேற்பட்ட தாவரங்களை உண்டு அழிக்கவல்லது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களைப் பரப்பக்கூடியது’ என்றெல்லாம் தகவல்கள் பரவின. சில மாதங்களுக்கு முன் ஆப்ரிக்கக் கெளுத்தி மீன் மற்ற மீன் இனங்களையெல்லாம் அழிக்கக்கூடியது என்று தகவல்கள் வெளியாகின.
தீங்கு பரப்பும் நத்தையையும் மீனையும் சுட்டுவதற்கு ‘ஆப்ரிக்க’ அடைமொழி தேவையா என்பதுதான் எழுப்ப வேண்டிய கேள்வி. உயிரினங்களுக்குப் பெயரிடும்போது வழக்கமாக அறிவியல் தன்மையிலான பெயர்களும், பொதுவான பெயர்களும் வைக்கப்படுகின்றன. அதனால், ஏறக்குறைய அனைத்து உயிரினங்களுக்கும் குறைந்தது இரண்டு, இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கும்.