வர்த்தக உலகம்

எல்ஐசி: ஒரு வாக்குறுதியின் எழுபது ஆண்டுகள்

- டி.சி. சுசீல் குமார் மற்றும் ஆர். சுதாகர்

Consumer Connect Feature

எல்ஐசி எதைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது, ஏகபோக உரிமை முடிவுக்கு வந்த பிறகு அது எதை நிரூபித்தது, அதன் புதிய பங்குதாரர்களால் அளவிடுவது கடினமாக இருக்கும் விஷயங்கள் என்ன?

1956-க்கு முன்பே இந்தியாவில் ஆயுள் காப்பீடு இல்லாமல் இல்லை. ஆனால், காப்பீட்டுக் கொள்கை உறுதியாக நிறைவேற்றப்படும் என்ற நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தது. 44 நிறுவனங்கள் ரூ.22.44 கோடி மதிப்பிலான காப்பீட்டு வணிகத்தை மேற்கொண்டிருந்த நிலையில், 1938-ம் ஆண்டுக்குள் இந்தச் சந்தை 176 நிறுவனங்களாகவும், ரூ.298 கோடி மதிப்பிலான வணிகமாகவும் வளர்ந்தது. அந்தக் காலகட்டம் குறித்து நிறுவனத்தின் சொந்த பதிவுகளின்படி, அவற்றில் பல நிதி ரீதியாக வலுவற்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டன; அவை மோசமான முறையில் தோல்வியடைந்தன.

1938-ம் ஆண்டின் காப்பீட்டுச் சட்டம், அரசின் கடுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கான முதல் முயற்சியாக அமைந்தது. 1944-ம் ஆண்டு முதல் காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 1956, ஜனவரி 19-ம் தேதி, ஓர் அவசரச் சட்டத்தின் மூலம் ஆயுள் காப்பீடு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 1956 செப்டம்பர் 1-ம் தேதி, 245 இந்திய மற்றும் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களும் வருங்கால வைப்பு நிதிச் சங்கங்களும் ஒரே சட்டப்பூர்வ நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்திய அரசு  ரூ.5 கோடி மூலதனப் பங்களிப்பை வழங்கியது.

எல்ஐசிக்கு இரட்டை நோக்கம் வழங்கப்பட்டது: குடும்பங்களின் சேமிப்பை நம்பகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவது. மேலும், மூலதனம் மிகக் குறைவாக இருந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக அந்தச் சேமிப்புகளை மூலதனமாக மாற்றுவது. இதன் பின்னர் நடைபெற்றது நிதி ஜனநாயகமயமாக்கலுக்கான ஒரு மிகப்பெரிய முயற்சியாகும். நவீன வங்கிச் சேவைகள் கிராமப்புற இந்தியாவை சென்றடைவதற்கு வெகுகாலம் முன்பே, சைக்கிள்கள், காகிதப் படிவங்கள் மற்றும் பொறுமை ஆகியவற்றை மட்டுமே துணையாகக் கொண்டு எல்ஐசி முகவர்கள், சாலை வசதிகள்கூட இல்லாத தொலைதூரக் கிராமங்களுக்கு நிதிப் பாதுகாப்பைக் கொண்டு சென்றனர்.

நாடு முழுவதும் பிரீமியம் அட்டவணைகளை ஒரே மாதிரியாக ஆக்கியதன் மூலம், முறையான நிதிச் சேவைகள் எட்டாக்கனியாக இருந்த கோடிக்கணக்கான மக்களுக்கும் நிதித் திட்டமிடலை எல்ஐசி சாத்தியமாக்கியது. பல தலைமுறைக் குடும்பங்களுக்கு எல்ஐசி முகவர் என்பவர் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவராக இருந்தார்.

நிறுவனத்திற்குள், இந்த நோக்கம் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியது. ஊழியர்களும் முகவர்களும் வெறுமனே ஒரு நிறுவனத்துக்காகப் பணியாற்றவில்லை. அவர்கள் ‘எல்ஐசியன்ஸ்’ என்ற பெயரைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டனர். இந்திய நிதித் துறையின் பிற நிறுவனங்களின் முகவர்களும் தங்கள் நிறுவனங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனத்தைத் தங்களுடையதாகக் கருதுபவர்கள் மிகச் சிலரே.

எல்ஐசி, இந்தியாவின் பொருளாதாரத் தற்சார்புக்கான ஒரு அமைதியான கருவியாகவும் மாறியது.

சாதாரண குடும்பங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட சிறிய அளவிலான பிரீமியங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, நீண்டகால மூலதனமாக மாற்றப்பட்டன. அரசுப் பத்திரங்கள் மூலம் அந்த நிதி நாட்டைக் கட்டமைக்கும் பணிக்காக வழங்கப்பட்டது. சுமார் ரூ.400 கோடி சொத்துகளுடன் தொடங்கிய எல்ஐசி, இன்று ரூ.57.29 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கிறது. இதில் ரூ.34.85 லட்சம் கோடி மத்திய மற்றும் மாநில அரசுப் பத்திரங்களில் புத்தக மதிப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2000-ம் ஆண்டு காப்பீட்டுத் துறை திறக்கப்பட்டபோது, பாதுகாக்கப்பட்ட ஏகபோக நிறுவனமான எல்ஐசி தனியார் போட்டியால் தனது வலிமையை இழந்துவிடும் என்ற பொதுவான கருத்து நிலவியது. ஆனால், கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்துக்குப் பிறகும், முதல் ஆண்டு பிரீமியத்தில் 56.66 சதவீதத்தையும், விற்பனை செய்யப்பட்ட பாலிசிகளில் 65.16 சதவீதத்தையும் எல்ஐசி கொண்டுள்ளது. 2024-25 நிதியாண்டு முதல் எல்ஐசி D-SII (Domestic Systemically Important Insurer – உள்நாட்டில் அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த காப்பீட்டு நிறுவனம்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2025-26-ம் நிதியாண்டில், பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி  ரூ.4.96 லட்சம் கோடி மதிப்பிலான நலத்தொகைகளை வழங்கியுள்ளது. இது அதன் நிகர பிரீமியம் வருவாயில் 93 சதவீதத்துக்குச் சமம். இந்த இரு எண்ணிக்கைகளும் பணம் வரவு மற்றும் செலவு என்ற நேரடி கணக்கு இல்லை. ஆனால், இந்த விகிதம் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பின் அளவை வெளிப்படுத்துகிறது.

அதன்பிறகு சந்தை வந்தது. 2021-ம் ஆண்டின் நிதிச் சட்டம், எல்ஐசி சட்டத்தில் திருத்தம் செய்து, நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதித்தது. 2022 ஆண்டு மே மாதத்தில், அரசு தனது 3.5 சதவீதப் பங்குகளை ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ஒரு பங்குக்கு ரூ.949 என்ற விலையில் விற்று, சுமார் ரூ.20,500 கோடியைத் திரட்டியது.

பங்குச்சந்தையில் அந்தப் பங்கு தள்ளுபடி விலையில் பட்டியலானது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய பங்கு விற்பனை மூலம் மேலும் 6.5 சதவீதப் பங்குகளை அரசு விற்றது. இதன் மூலம் ரூ.31,552 கோடி திரட்டப்பட்டது. மேலும், கட்டுப்பாட்டாளரின் காலக்கெடுவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே பொதுமக்களின் பங்குதாரர் அளவு 10 சதவீதமாக உயர்ந்தது.

அரசு தொடர்ந்து 90 சதவீதப் பங்குகளுடன் கட்டுப்பாட்டுப் பங்குதாரராக உள்ளது. ஆனால், 2032 மே மாதத்துக்குள் பொதுமக்களின் பங்குதாரர் அளவு 25 சதவீதத்தை எட்ட வேண்டும். இதனால், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளை மதிப்பிடும் பங்குச்சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு எல்ஐசி தற்போது பதிலளிக்க வேண்டியுள்ளது.

அடுத்த 70 ஆண்டுகளில் எல்ஐசியின் பாதையை அதன் முதல் ஐந்து தசாப்தங்களைக் காத்த பாதுகாப்பு நிர்ணயிக்கப் போவதில்லை. மாறாக, நான்கு விஷயங்கள் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். மக்கள்தொகை மாற்றம், அது விற்பனை செய்யும் பாலிசிகளின் தொடர்ச்சி, வாடிக்கையாளர்களைச் சென்றடையும் விதம், பல தசாப்தங்களுக்கான பொறுப்புகளுக்கும் காலாண்டு அடிப்படையிலான எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான முரண்பாடு.

எல்ஐசி தனது வரலாற்றின் பெரும்பகுதியில், ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க உதவும் வகையில் காப்பீட்டுப் பாதுகாப்பை விற்பனை செய்தது. இந்தியாவின் பிரச்சினை தற்போது இதற்கு நேர்மாறாக மாறி வருகிறது. நாடு வயதான  அதிகம் கொண்ட மக்கள்தொகையை நோக்கி நகர்கிறது. ஒரு காலத்தில் ஓய்வுக்காலப் பாதுகாப்பை வழங்கிய கூட்டுக் குடும்ப அமைப்பும் படிப்படியாகக் கரைந்து வருகிறது. எனவே, இந்தியாவுக்கு அதிகம் தேவைப்பட இருக்கும் காப்பீட்டு வணிகம், ஆண்டுத்தொகை மற்றும் முதியோர் கால வருமானம் தொடர்பானதாக இருக்கும். இந்தத் துறையில் எல்ஐசியின் பலம் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்ல.

மூன்று தலைமுறைகளாக அதனுடன் தொடர்பில் இருந்த குடும்பங்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், 30 மற்றும் 40 ஆண்டுகளுக்கான உத்தரவாதங்களை நிறைவேற்றக்கூடிய அதன் மிகப்பெரிய அளவிலான செயல்திறனுமே எல்ஐசியின் பலம். இந்த வணிகத்தை வளர்ப்பதற்கு ஆழமான நிறுவனப் பத்திரச் சந்தை தேவைப்படும்.

இரண்டாவது கேள்வி, விற்பனை செய்யப்பட்ட பாலிசிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றனவா என்பதுதான். பாலிசிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும் 61-வது மாத தொடர்ச்சி விகிதம், 2024-25 ஆண்டில் 50.31 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26 ஆண்டில் 46.88 சதவீதமாகக் குறைந்துள்ளது. பிரீமியத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, இந்த விகிதம் 63.12 சதவீதத்திலிருந்து 59.31 சதவீதமாகக் குறைந்துள்ளது.

காலாவதியாகும் ஒரு பாலிசி என்பது கைவிடப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். வெறும் அறிவுறுத்தல்களால் பாலிசி தொடர்ச்சி விகிதத்தை மேம்படுத்த முடியாது. குடும்பத்தால் உண்மையில் செலுத்தக்கூடிய அளவுக்கு பிரீமியம் இருக்கும்போதும், கடுமையான வருடாந்திர தவணைகளுக்குப் பதிலாக மாதந்தோறும் செலுத்தும் வகையில் அமைக்கப்படும்போதும், வாடிக்கையாளர் உண்மையில் தேவைப்பட்ட பாலிசியே அவருக்கு விற்பனை செய்யப்படும்போதும்தான் தொடர்ச்சி அதிகரிக்கும்.

மேலும், எல்ஐசி தனது டிஜிட்டல் மாற்றத்தையும் காலத்துக்கு ஏற்ப நிறைவு செய்ய வேண்டும். பழைய மெயின்ஃப்ரேம் கணினி அமைப்புகளிலிருந்து வேகமான, கிளவுட் அடிப்படையிலான நவீன கட்டமைப்புகளுக்கு மாறுவதுடன், தரவுப் பகுப்பாய்வு மற்றும் முன்னறிவிப்புகளில் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்த வேண்டும்.

மூன்றாவது விஷயம் விநியோகம். எல்ஐசிக்கு 92 வங்கிகளுடன் கூட்டணி உள்ளது. ஆனால், அவற்றின் மூலம் வரும் வருவாய் கடந்த காலாண்டில் குறைந்துள்ளது. மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, எல்ஐசியின் முகவர் எண்ணிக்கை ஓராண்டில் 14.87 லட்சத்திலிருந்து 14.57 லட்சமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், மற்ற அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் தனிநபர் முகவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 18.36 லட்சமாக உயர்ந்துள்ளது.

தொலைபேசியிலேயே வங்கிக் கணக்கைத் தொடங்கும் தலைமுறை, ஒரு பாலிசிக்காக பல நாட்கள் காத்திருக்க விரும்பாது. ஆனால், இந்த காரணத்தால் முகவர்கள இல்லாமல் போய்விட மாட்டார்கள். அவர்களின் பணியின் தன்மை மாற வேண்டும். பணம் மற்றும் காகித ஆவணங்களை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, குடும்பங்களுக்கு ஓய்வுக்காலத் திட்டமிடல் குறித்தும், அடுத்த 30 ஆண்டுகளில் அவர்களுக்குத் தேவைப்படக்கூடிய நிதிப் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை வழங்கும் பணியாக அது மாற வேண்டும். மனிதர்கள் செய்யத் தேவையில்லாத பணிகளை தொழில்நுட்பம் மேற்கொள்ள வேண்டும்.

நான்காவது விஷயம் மிகவும் கடினமானது. பொதுப் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கு நிதி ஒழுக்கம் அவசியம். ஆனால், எல்ஐசியை உருவாக்கிய பரந்துபட்ட மக்கள் சென்றடைதல் மற்றும் சமூக நோக்கத்தை கைவிடுவது, அந்த நிறுவனத்தைப் பாதுகாத்து வந்த மிக முக்கியமான அம்சத்தையே அழித்துவிடும்.

இவை எதுவும் இந்த நிறுவனம் எப்படிப்பட்டது என்பதை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. வேறு இரண்டு எண்ணிக்கைகள் அதை வெளிப்படுத்துகின்றன. 2026 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, எல்ஐசியிடம் ரூ.7,318.50 கோடி மதிப்பிலான கோரப்படாத பாலிசிதாரர் பணம் இருந்தது. அந்தத் தொகையின் மீது வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.

2018-ல் இருந்த ரூ.10,509 கோடியுடன் ஒப்பிடும்போது, இந்தத் தொகை குறைந்துள்ளது. இந்தக் குறைவின் ஒரு பகுதி, தங்களுடைய பணத்தைப் பெற யாரும் கேட்காத நிலையில், அவர்களைத் தேடிச் சென்ற கிளைகளின் முயற்சியால் ஏற்பட்டது.

வீடு மாறியபின் புதிய முகவரியைத் தெரிவிக்காத பாலிசிதாரர்கள் இருக்கிறார்கள். ஒரு பாலிசி இருப்பதே தெரியாமல் வாழும் குடும்பங்களும் இருக்கின்றன. ஏனெனில், அந்தப் பாலிசியை வாங்கியவர் ஆவணங்களை அலமாரியில் வைத்துவிட்டு, அதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

கடந்த ஆண்டுக்கான காப்பீட்டுத் துறை புள்ளிவிவரங்களின்படி, எல்ஐசியிடம் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு 100 மரணக் கோரிக்கைகளிலும் இரண்டுக்கும் குறைவான கோரிக்கைகளே நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒட்டுமொத்த தனியார் காப்பீட்டுத் துறை தீர்த்துக் கொண்ட கோரிக்கைகளின் எண்ணிக்கையைவிட அதிகமான மரணக் கோரிக்கைகளை எல்ஐசி தீர்த்துள்ளது.

எல்ஐசி போன்ற ஒரு நிறுவனத்தை அதன் காலாண்டு லாப வரம்புகளைக் கொண்டு மட்டுமே மதிப்பிடுவது, அதன் சந்தை ஆதிக்கத்தை உருவாக்கிய அடிப்படை அம்சங்களையே புறக்கணிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஆழமான பொதுமக்கள் நம்பிக்கையும் சமூகப் பொறுப்புணர்வும். ஆனால், அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு பழைய நற்பெயர் மட்டும் போதாது.

விநியோக முறைகளை நவீனப்படுத்துவதும், மாறிவரும் மக்கள்தொகைச் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதும் அவசியம். பொதுப் பங்குச்சந்தைகள் குறுகிய கால நிதித் திறனை வெகுவாக மதிப்பிடுகின்றன. ஆனால், இந்தியாவின் நிதி அமைப்பு பல தசாப்தங்களுக்கு நீளும் நிதிப் பொறுப்புகளை நிர்வகிக்கும் எல்ஐசியின் திறனை இன்னும் சார்ந்திருக்கிறது. சந்தைக்கும் பாலிசிதாரருக்கும் முன் நிற்கும் சவால் ஒன்றுதான். அது, குறுகிய கால செயல்திறன் அளவுகோல்கள், நீண்டகால நிதி நிலைத்தன்மையையும் நிறுவனத்தின் அடிப்படை நோக்கத்தையும் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வது.

- டி.சி. சுசீல் குமார், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர். | ஆர். சுதாகர், நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர்.

SCROLL FOR NEXT