சென்னை: மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் உத்தரவுகளின்படி, காமராஜர் துறை முகமும் சென்னை துறைமுகமும் நடத்திய ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2026’ முன்னிட்டு கடந்த அக்.26 முதல் நவ.1-ம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைபிடித்தன.
இதன் முன்னோட்டமாக ஆக. 17 முதல் நவ. 16-ம் தேதி வரை நடைபெற்ற 3 மாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது நேர்மை, ஊழல் தடுப்பு குறித்து துறைமுக அதிகாரிகளுக்கு பல்வேறு பயிற்சி பட்டறைகளும் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கட்டுரை, வாசகம் எழுதுதல் மற்றும் விநாடி-வினா போட்டிகளும் நடத்தப்பட்டன.
இளைய தலைமுறையினர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பொன்னேரி லோகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் துறைமுக ஊழியர்கள் இணைந்து ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தினர்.
வெளிப்புற தொடர்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கட்டுரை எழுதும் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, போஸ்டர் தயாரிப்பு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்களின் தலைவர் சச்சின் எஸ்.குர்வே, தலைமை கண்காணிப்பு அதிகாரி பி.அனுக்கிரஹா, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
முன்னதாக ‘வாய்ஸ் ஆஃப் விழிப்புணர்வு - 2026’ சிறப்பு புத்தகத்தையும் வெளியிட்டனர். நிறைவு விழாவில் பங்கேற்ற துறைமுக அதிகாரிகள் பேசியதாவது:
பி.அனுக்கிரஹா: செழிப்புக்கான நேர்மை என்ற கொள்கையில் உறுதியேற்று நமது துறைமுகத்தை நம்பிக்கை, செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் தளராத நேர்மையின் அடையாளமாக மாற்ற அனைத்து அதிகாரிகளும் பாடுபடுவோம்.
காமராஜர் துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2026’ நிறைவையொட்டி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து நடத்திய போட்டிக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ‘கண்காணிப்பு குரல்’ புத்தகத்தை காமராஜர் மற்றும் சென்னை துறைமுகங்களின் தலைவர் சச்சின் எஸ்.குர்வே வெளியிட்டார். தலைமை கண்காணிப்பு அதிகாரி பி.அனுக்ரஹா, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஜே.பி.ஐரீன் சிந்தியா: ஒரு சிறந்த நிறுவனத்துக்கு நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறைகள் ஆகிய மூன்று அடிப்படை கொள்கைகள் அவசியம். நாம் அறநெறியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படித்தான் பெரிய வணிகங்களை கட்டமைக்க முடியும்.
எஸ்.விஸ்வநாதன்: ஊழல் தடுப்பு உணர்வு என்பது ஒவ்வொருவரின் மனசாட்சிக்கு உள்ளிருந்தே தொடங்க வேண்டும். எந்தவொரு நிறுவனத்தின் அல்லது நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கும் நேர்மை, அறநெறி மற்றும் நாணயம் ஆகிய மூன்றுமே அடிப்படை தூண்களாகும். நேர்மை இல்லாமல் நம்பிக்கை சிதையும். நாணயம் இல்லாமல் அமைப்புகள் செயல் திறனை இழக்கும்.
சச்சின் எஸ்.குர்வே: மாணவர்களாகிய நீங்கள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். அறிவு, திறன், தொழில்நுட்பம் மட்டுமே நம்மை முழு மனிதனாக மாற்றிவிடாது. நல்ல குணநலன், நேர்மை, ஒழுக்கம், நாணயம் ஆகியவை ஒருவரை வெற்றியாளராக மாற்றும்.
அதுவே உங்கள் சாதனைகளின் உண்மையான மதிப்பை தீர்மானிக்கும். எனவே நேர்மை உங்கள் பழக்கமாகவும், ஒழுக்கம் உங்கள் வாழ்கை முறையாகவும், நாணயம் உங்கள் அடையாளமாகவும் மாறட்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுடன் அதிகாரிகள்.
வெற்றிபெற்றோர் விவரம்
‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டியும், ஆசிரியர்களுக்கான கட்டுரை போட்டியும் நடைபெற்றன. ஆன்லைன் விநாடி-வினா போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்திருந்தது.
இப்போட்டிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளில் சீனியர் பிரிவில் கே.கே.நகர் பிஎஸ்பிபி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் எஸ்.ரமேஷ் கிருஷ்ணா முதலிடத்தையும் தி குரோவ் பள்ளி மாணவர் எஸ்.லோகேஷ்வர் இரண்டாமிடத்தையும் தி பிஎஸ்பிபி மில்லினியம் பள்ளி மாணவர் கே.ஏ.துஷார் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
அதேபோல் ஜூனியர் பிரிவில் கோபாலபுரம் டிஏவி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.சஞ்சனா முதலிடத்தையும், ராணுவ பள்ளி மாணவி அஜூனி கவுர் இரண்டாமிடத்தையும், வேளச்சேரி சென்னை மேல்நிலை பள்ளி மாணவர் எம்.அருளமுதன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
ஆசிரியர்களுக்கான கட்டுரை போட்டியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி முதலிடத்தையும், திருவள்ளூர் எலைட் வேர்ல்ட் பள்ளி ஆசிரியை அனுபிரியா இரண்டாமிடத்தையும், செங்கல்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாரதிராஜா மூன்றாமிடத்தையும் பெற்றனர். நிறைவாக மேலாளர் (விழிப்புணர்வு) ராஜலிங்கம் நன்றி கூறினார்.