

சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரை: எனக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை என்று சு.வெங்கடேசன் எம்,பி தெரிவி்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் ரயில் நிலையத்துக்கு வந்திறங்கிய கார் குறித்து விமர்சிக்கப் பட்டிருக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் உண்மையைச் சரி பார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன் வைக்கப்படும்போது, அவை ஒரு சார்பு நிலையை வெளிப்படுத்துவதுடன், தனி நபர் தாக்குதலாகவும் மாறுகிறது. அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் எதுவும் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே எனது ரயில் பயணம். முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகி விடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகி விடாது.
பாவ புண்ணியத்துக்கும், பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம். ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப் போவதும் இல்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.